இலங்கையை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகள் பங்குபெறும் காமன்வெல்த் பாங்க் சீரியல் முத்தரப்பு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதல் 2 போட்டிகள் மழையால் தடைபட்டதால் இந்தியாவுக்கு 4 புள்ளிகளும் (2 ஆட்டங்களில் தலா 2 புள்ளிகள்), இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா 2 புள்ளிகளும் கிடைத்தன.
இந்நிலையில் சிட்னியில் இன்று தொடரின் 3வது ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், மாத்யூ ஹைடன் ஆகியோர் நங்கூரம் பாய்ச்சியது போல் நின்று விளையாடினர். ஹைடன் 42 ரன்கள் எடுத்தபோது அமரசிங்கே பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமந்தா வாஸ் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆட வந்த கிளார்க், கில்கிறிஸ்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினார். கில்கிறிஸ்ட் 61 ரன்கள் எடுத்திருந்த போது கபுகெடிரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. கிளார்க் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார்.
இலங்கையின் அமரசிங்கே, சமந்தா வாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கபுகெடிரா, மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 254 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தரங்காவும், ஜெயசூர்யாவும் களமிறங்கினர்.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஜெயசூர்யா 7 ரன்களுக்கும், தரங்கா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
விக்கெட் கீப்பர் சங்ககரா மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் ஏதோ பெவிலியனில் வேறு வேலை இருப்பது போல் வந்தவுடன் அவுட்டாகி சென்று விட்டனர்.
இறுதியில் இலங்கை அணி 31.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா 128 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றது.
ஆஸ்திரேலியாவின் பிராக்கென் 5 விக்கெட்டுகளையும், பிரட் லீ, ஜான்சன், ஹாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இருவர் ரன் அவுட் ஆயினர்.
ஆட்டநாயகனாக ஆஸ்திரேலியாவின் பிராக்கென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளும், இந்தியா 4 புள்ளிகளும், இலங்கை 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications