சிட்னி: சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்ட விதத்தை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன.
ஆஸ்திரேலிய பத்திரிகைகள் அனைத்துமே சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் செய்த குழப்பத்தையும், ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையையும் கடுமையாக சாடியுள்ளன. இந்தியா இப்போட்டியில் ஒன்று வெற்றி பெற்றிருக்கும் அல்லது டிரா செய்திருக்கும். ஆனால் அதை நடுவர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் தடுத்து விட்டதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.
ஆஸ்திரேலியன் நேஷனல் செய்தித்தாளில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் மைக் கோவர்ட் எழுதியுள்ள கட்டுரையில், ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகிய இருவரும் மிக மோசமான தீர்ப்புகளை அளித்தனர்.
ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையும் படு மோசம். சிறப்பாக ஆடி வென்றிருக்க வேண்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி அவப்பெயருடன் ஆடி வென்றது அவமானத்துக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், அவர்களின் நடத்தை கேள்விக்குறியதாகியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடுவர்களின் செயல்பாடுகளும் படு மோசம். தங்களது செயலுக்கு இரு நடுவர்களும் வருந்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழில் எழுதியுள்ள பீட்டர் ரோபக், இது ஒரு மிக மோசமான போட்டி. இந்தியா கைவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியை, கிரிக்கெட்டை நேசிக்கும் யாருமே ரசிக்க மாட்டார்கள்.
இந்திய பேட்டிங் வரிசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆடியது. சிறந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் சிட்னி போட்டி அவர்களுக்கு பெரும் கசப்பான அனுபவமாக மாறி விட்டது என்று கூறியுள்ளார்.