மீன் பிடிக்கப் போனதால் கல்தா-கடுப்பான சைமண்ட்ஸ் ஓய்வு?

வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரையொட்டி நடந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட்டத்தில் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. மாறாக மீன் பிடிக்கப் போய் விட்டார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவரை வங்கதேச டூருக்கான அணியில் சேர்க்காமல் கல்தா கொடுத்து விட்டது.
மேலும், இப்படி இனிமேல் எதிர்காலத்தில் சீரியஸ்னஸ் இல்லாமல் நடந்து கொண்டால், அணி வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்தும் சைமண்ட்ஸ் நீக்கப்படுவார் என கடும் எச்சரிக்கையும் விடப்பட்டது.
வங்கதேச தொடரில் கல்தா கொடுக்கப்பட்ட சைமண்ட்ஸ், அடுத்து இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கல்தாவால் சைமண்ட்ஸ் கடுப்பாகியுள்ளார். இதனால் அவர் கிரிக்கெட் போட்டிக்கே முழுக்குப் போடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சைமண்ட்ஸ் கூறுகையில், எனக்கு எது முக்கியம் என்று தெரிகிறதோ அதனை தேர்வு செய்து கொள்ளும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. அது பற்றி நான் இந்த முறை முடிவு செய்து விடுவேன்.
எனது தனிமை, எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் மதிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு ஆதரவாக பலர் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்பி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார்.
பிற நாட்டு அணிகளுடன் பல்வேறு சர்ச்சைகளில் முன்பு ஈடுபட்டவரான சைமண்ட்ஸ் இப்போது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துடனேயே சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications