டெல்லி: 1983ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸில் பெருமைக்குரிய உலகக் கோப்பையை வென்ற கபில் தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
ஐசிஎல் எனும் பெயரில் தனி கிரிக்கெட் அமைப்பை நடத்தி வரும் 1983 அணி கேப்டன் கபில்தேவ் மற்றும் அவருக்குத் துணை நிற்கும் பின்னி, பல்விந்தர் சிங் சாந்து மற்றும் மதன்லால் போன்றவர்களை தற்போது முற்றிலுமாக இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கபில்தேவின் பிரமாண்ட போஸ்டர் மற்றும் படங்களை வாரியத்தைச் சேர்ந்தவர்களே சில தினங்களுக்கு முன்பு கிழித்தெறிந்த கொடுமையும் நடந்தது.
இந்நிலையில், உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய கபில்தேவ் மற்றும் அவரது தலைமையில் பணியாற்றிய வீரர்களின் சாதனைக்கு வரும் ஜூன் 25-ம் தேதியோடு 25 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இந்த வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பலரும் கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தங்கள் கவுரவத்தை விட்டு இறங்க முடியாது என மௌனம் காத்து வந்தது வாரியம்.
இந்நிலையில் வேறுபாடுகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, உலகக் கோப்பை ஹீரோக்களை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும் என்ற லிட்டில் மாஸ்டர் காவஸ்கரின் யோசனையை ஏற்று, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் உதவியுடன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இன்று காலை புதுடெல்லியில் துவங்கிய வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் முதல் நிகழ்ச்சியாக கபில்தேவ் மற்றும் அவரது அணி நண்பர்கள் காவஸ்கர், பின்னி மற்றும் மதன்லால் ஆகியோரிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட கிரிக்கெட் பேட் ஒன்று வழங்கப்பட்டது. விஜய் மல்லையாவின் யுனைட்ட் ப்ரூவரிஸ் மற்றும் கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பிற்பகலில் நொய்டாவிலுள்ள ஜேபீ கோல்ப் மைதானத்தில் 1983 அணி வீரர்கள் கோல்ப் விளையாடினர்.
இன்று மாலை டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடக்கும் வண்ணமிகு நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்கள், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீர்ரகள் பலரும் கலந்துகொள்கிறார்கள். அனைவரது முன்னிலையிலும் உலகக் கோப்பைச் சாம்பியன்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு கொடுத்து கௌரவிக்கிறது, கிரிக்கெட் வாரியம்.
இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் இதில் பங்கேற்றுப் பரிசுகளை வழங்குகிறார். சரத் பவார் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
நாளை காலை இந்த உலக சாம்பியன்கள் அனைவரும் லண்டனுக்குப் புறப்படுகிறார்கள்.
அங்கு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தனிப்பட்ட முறையில் விருந்து கொடுத்து கௌரவிக்கிறார். உலகக் கோப்பையை முத்தமிட்டபடி இந்திய கேப்டன் கபிலும் மற்ற வீர்ர்களும் போஸ் கொடுத்த அதே பார்வையாளர் மாடத்தில் இந்த விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.