Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் விவகாரம் முடியும் வரை ஆஸி. டூர் சஸ்பெண்ட்: பிசிசிஐ


சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி, ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்கும் வரை சிட்னி நகரை விட்டு இந்திய அணி கிளம்பாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய டூரையும் அது சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது.

ஹர்பஜன் சிங் விவகாரத்தை பேசித் தீர்க்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அந்த பேச்சுவார்த்தையின் முடிவு தெரியும் வரை போட்டிகளில் விளையாடுவதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சரத்பவாரின் இல்லத்தில் இன்று நடந்த அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியைக் குறி வைத்து ஆஸ்திரேலிய வீரர்களும், நடுவர்கள் ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகியோர் ஆடியுள்ள ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இனவெறியுடன் திட்டியதாக கூறி அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 8 தவறான தீர்ப்புகளைக் கூறிய இரு நடுவர்களும், ஆஸ்திரேலிய அணிக்கு முழு ஆதரவுடன் நடந்து கொண்டனர்.

இந்த தொடர் சம்பவங்களால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பவார் வீட்டில் கூட்டம்:

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் இன்று வாரிய நிர்வாகிகள் அவசரமாக கூடி விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஹர்பஜன் சிங் விவகாரம் முடியும் வரை வீரர்கள் சிட்னியை விட்டு வெளியேற வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹர்பஜன் விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை ஆஸ்திரேலியாவில் எந்தப் போட்டிகளிலும் விளையாடுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ஹர்பஜன் சிங் மீதான தடையை எதிர்த்து அப்பீல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டமும் நாளை டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஹர்பஜன் விவகாரத்தை பேசித் தீர்க்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பவாரின் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ஹர்பஜன் சிங் மீதான நடவடிக்கை நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது. நாட்டின் பெருமையும், பெயரும் இதில் அடங்கியுள்ளது.

எனவே இந்த பொய்யான, அவதூறான புகாரை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ளோம். ஹர்பஜன் மீதான இனவெறிப் புகாரை ஐசிசி வாபஸ் பெற வேண்டும். இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதையே எங்களது அப்பீல் மனுவில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

இதற்கிடையே, ஸ்டீவ் பக்னர் இனி வரும் போட்டிகளில் இடம் பெறக் கூடாது என்று முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஹர்பஜன் சிங் மீதான இனவெற புகார் முற்றிலும் பொய்யானது. அவர் மீது ஐசிசி போட்டி நடுவர் மைக் புராக்டர் விதித்துள்ள தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நியாயமற்ற முடிவு.

ஹர்பஜன் சிங் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். அப்பீல் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

இனவெறிக்கு எதிராக இந்தியா எப்போதும் போராடி வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை இனவெறிக்கு எதிரான நிலையில் உறுதியாக உள்ளது.

போட்டி நடுவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நியாயமற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங் விவகாரம் முடியும் வரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

கிரிக்கெட் மிகப் பெரியது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்திய அணியினரின் கெளரவமும் முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரையும் பாதிக்கும் விஷயம் இது. எனவே ஹர்பஜன் மீதான இந்த அநியாயமான தீர்ப்பை எதிர்த்து இறுதி வரை போராடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2வது டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தவறுகள் மிகவும் கவலைக்குரியது. இது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டர்ட் என்று திட்டிய ஆஸி. வீரர்:

இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், இந்திய வீரர் ஒருவரைப் பார்த்து பாஸ்டர்ட் என்று திட்டியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் ஐசிசியிடம் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், இந்திய வீரர் ஒருவரைப் பார்த்து பாஸ்டர்ட் என்று திட்டியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரும் இன்றே ஐசிசியின் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+