இலங்கை 292 - இந்தியாவுக்கு 237 ரன் முன்னிலை
காலி: ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சு மற்றும் கும்ப்ளேவின் பக்கபலமான பந்து வீச்சு ஆகியவற்றால் இலங்கையை அதன் முதல் இன்னிங்ஸில் 292 ரன்களில் சுருட்டியது இந்தியா. பின்னர் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் 237 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
காலி நகரில் நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஷேவாக்கின் சிறப்பான ஆட்டத்திற்கு உறுதுணையாக மற்ற வீரர்கள் குறிப்பாக மூத்த வீரர்கள் விளையாடாததால், பெரிய ஸ்கோரை எட்டியிருக்க வேண்டிய இந்தியா, 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து இலங்கை தனது ஆட்டத்தை தொடங்கியது. இலங்கைக்கு சரியான பதிலடியாக ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு இருந்தது. அபாரமான பந்து வீச்சால் இலங்கையை நிலை குலைய வைத்தார் ஹர்பஜன்.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்திருந்தது. மஹிளா ஜெயவர்த்தனே 46 ரன்களுடனும், பிரசன்னா ஜெயவர்த்தனே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியாவின் சார்பில் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்களையும், ஜாகிர்கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்று காலை மீண்டும் இலங்கை தனது பேட்டிங்கைத் தொடர்ந்தது. ஆனால் மறுபடியும் ஹர்பஜன் அட்டகாசமான பந்து வீச்சை காட்டி இலங்கையை சுருள வைத்தார். இன்று மேலும் இரு விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன். அவருக்கு உறுதுணையாக கும்ப்ளேவின் அனுபவப் பந்து வீச்சு கை கொடுத்தது.
மிச்சமிருந்த 5 விக்கெட்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். கும்ப்ளேவுக்கு 3 விக்கெட் கிடைத்தது. இறுதியில், 93.3 ஓவர்களில் இலங்கை அணி 292 ரன்களில் சுருண்டது.
கேப்டன் ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி 86 ரன்களை எடுத்தார். இந்தியாவை விட இலங்கை அணி 37 ரன்கள் பின் தங்கியிருந்தது.
இதையடுத்து உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. வழக்கம் போல ஷேவாக் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸைப் போலவே வேகமாக ஆடிய ஷேவாக் சரியாக 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஸ் பந்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கம்பீர் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். 149 பந்துகளைச் சந்தித்த அவர் 74 ரன்களைக் குவித்தார்.
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய மூத்த வீரர்களான டிராவிடும், சச்சினும் இன்று சற்று மேம்பட்ட ஆட்டத்தைக் காட்டினர். ஆரம்பத்தில் சுமாராக விளையாடத் தொடங்கிய டிராவிட் பின்னர் சற்று வேகம் பிடித்து 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல சச்சின் ஆரம்பத்தில்அடித்து ஆடினார். இதனால் பெரிய ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 42 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கங்குலியும், வி.வி.எஸ்.லட்சுமணும் ஜோடி சேர்ந்தனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டத்ைத முடித்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
ஆட்ட நேர இறுதியில், இந்தியா 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது. வாஸ் 2 விக்ெகட்களையும், முரளிதரன், மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கையை விட தற்போது இந்தியா 237 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications