ஸ்ரீசாந்த்துக்குப் பளார்: ஹர்பஜனுக்கு 11 போட்டிகளில் ஆட தடை!
டெல்லி: பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அடித்த குற்றத்துக்காக, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு 11 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொஹாலியில் நடந்த ஐபிஎல் போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் வீரர் ஸ்ரீசாந்த்தை, தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இன்று டெல்லியில் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில், ஹர்பஜன் சிங்குக்கு 11 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.
ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 11 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டதாக போட்டி நடுவரும், விசாரணை நடத்தியவருமான பரூக் என்ஜீனியர் அறிவித்தார்.
இதுதவிர 100 சதவீத போட்டிக் கட்டணமும் ஹர்பஜன் சிங்குக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. அவர் ஆடிய 3வது போட்டியிலிருந்து பெற்ற கட்டணத்தை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஹர்பஜன் சிங்கின் செயல்பாட்டைத் தடுக்கத் தவறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
களத்தில் இனிமேல் ஆவேசமாக செயல்படக் கூடாது என்று ஸ்ரீசாந்த்துக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
ஹர்பஜன் சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், இந்தப் போட்டித் தொடர் முழுவதும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மும்பை அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றால்தான் ஹர்பஜன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக் குழுவும் அமைப்பு
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் விவகாரம் குறித்து வக்கீல் சுதிர் நானாவதி தலைமையிலான விசாரணைக் குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இக்குழு தனது ஆய்வறிக்கையை 15 நாட்களுக்குள் வாரியத் தலைவர் சரத்பவாரிடம் அளிக்கும். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மீதான நடவடிக்கை குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்யும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications