ஸ்டீவ் பக்னர் நீக்கம்: புதிய நடுவராக பில்லி பவுடன் நியமனம்

மெல்போர்ன்: தவறான தீர்ப்புகளைக் கொடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியா - ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் புதிய நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நடுவர் ஸ்டீவ் பக்னரும், மார்க் பென்சனும் கொடுத்த சரமாரியான தவறான தீர்ப்புகளால் வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்தியா தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
இதையடுத்து ஸ்டீவ் பக்னருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் போர்க்கொடி உயர்த்தியது. மேலும் ஹர்பஜன் விவகாரமும் சேர்ந்து கொள்ள, இதை கெளரவப் பிரச்சினையாக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துக் கொண்டது.
பக்னரையும், பென்சனையும் தொடர் முழுவதும் நீக்க வேண்டும். ஹர்பஜன் சிங் மீதான தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடரை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க நேரிடும் என ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆனால் பக்னர் நீக்கப்பட மாட்டார் என முதலில் ஐசிசி தெரிவித்திருந்தது. இதனால் தொடரிலிருந்து இந்தியா விலகிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
பக்னர் நீக்கம்:
இந்த நிலையில் ஐசிசி பெரிய யூ டர்ன் போட்டு பக்னரை நீக்கியுள்ளது. இதுகுறித்து மெல்போர்னில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அவர் கூறுகையில், இந்தியா - ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய நடுவராக நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
பக்னர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா தனது ஆஸ்திரேலிய பயணத்தைத் தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நடுவரை மேற்பார்வை பார்க்க புது நடுவர்:
இதேபோல ஐசிசி போட்டி நடுவரான மைக் புராக்டருடன் இணைந்து, இணை நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புராக்டர்தான், ஹர்பஜன் சிங் மீதான இனவெறிப் புகார் உண்மை என்று கூறி அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடும் பிரஷர், உலக அளவில் பக்னருக்கு எதிராக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்தே ஐசிசி கீழிறங்கி வந்து பக்னரை நீக்கியுள்ளதாக கருதப்படுகிறது.
ஹர்பஜன் சிங் மீதான தடையை விலக்கக் கோரி இந்திய கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்கும் அப்பீல் கமிஷனர் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்படுவார் என்றும் ஸ்பீட் தெரிவித்தார்.
மேலும் ஸ்பீட் கூறுகையில், இரு நாட்டு அணிகளுக்கிடையே ஏற்பட்டு விட்ட கசப்பான அனுபவங்கள், நடுவர்களின் தவறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் ஆட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது.
சிட்னி போட்டியில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், பெர்த் போட்டியிலும் தொடரக் கூடாது என்பதற்காகவே ரஞ்சன் மதுகல்லே, இணை போட்டி நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயும் சமரச பாலமாக இவர் செயல்படுவார் என்றார் ஸ்பீட்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications