
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் டெல்லி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர். மேலும் டெல்லியில் 3 புக்கீகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து 12 ஐபிஎல் போட்டிகள் குறித்து விசாரணை நடத்தப்படவிருக்கிறது. மேலும் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்காக எங்கள் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது குறித்த முழு விவரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிசிசிஐயுடன் தொடர்பில் உள்ளோம். இந்த விவகாரம் குறித்த விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். விளையாட்டுக்கு எதிரான எதையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.