இந்தியா 526க்கு ஆல் அவுட்
அடிலைட்: அடிலைட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 526 ரன்களைக் குவித்தது. அனில் கும்ப்ளே அபாரமாக ஆடி 87 ரன்களைச் சேர்த்தார்.
அடிலைட் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நேற்றைய ஆட்டத்தின் முதல் நாள் இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை எடுத்திருந்தது. கங்குலி, டிராவிட், பதான் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தபோதிலும், ஷேவாக், சச்சின், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை நிலைப்படுத்தினர்.
ஷேவாக் 63 ரன்களை சேர்த்தார். லட்சுமண் 51 ரன்கள் எடுத்தார். சச்சின் சிறப்பாக ஆடி 124 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு 39வது சதமாகும். அடிலைட் மைதானத்தில் அவர் போட்ட முதல் சதமும் ஆகும்.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. சதம் கண்டு வலுவான நிலையில் இருந்த சச்சின் தொடர்ந்து சிறப்பாக ஆடி 153 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பிரெட் லீ, சச்சினை வீழ்த்தினார்.
இருப்பினும் கேப்டன் கும்ப்ளேவும், ஹர்பஜன் சிங்கும் இணைந்து அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் போட்டு அசத்தினர்.
கும்ப்ளே மிகச் சிறப்பாக ஆடி 87 ரன்களைக் குவித்தார். இது அவருக்கு 5வது டெஸ்ட் அரை சதமாகும். ஹர்பஜன் சிங் தன் பங்குக்கு 63 ரன்களைச் சேர்த்தார். இது அவருக்கு 4வது அரை சதமாகும்.
கும்ப்ளேவும், ஹர்பஜனும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 107 ரன்களைக் குவித்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
கும்ப்ளேவும், இஷாந்த் சர்மாவும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 58 ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 526 ரன்களைக் குவித்தது.
ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக்ஸ் மற்றும் மாத்யூ ஹைடன் களம் இறங்கியுள்ளனர்.
ஹெய்டனும், ஜேக்ஸும் இணைந்து நிதானமாக ஆடி, விக்கெட் விழாமல் ஆடினர். ஆட்ட நேர இறுதியில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 62 ரன்களைச் சேர்த்தது.
ஹெய்டன் 36 ரன்களும், ஜேக்ஸ் 21 ரன்களும் எடுத்துள்ளனர். நாளை 3வது நாள் ஆட்டம் தொடரும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications