சென்னை: சாம்பியன்ஸ் ட்ராபி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மசோதாவை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.வி. ரமண்ணா செவ்வாய்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, இனிமேல் சென்னை நகரில் சாம்பியன்ஸ் ட்ராபி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால், அந்த போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி கிளப் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கவுள்ளன.
சென்னையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு கேளிக்கை வரி விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.