சாம்பியன்ஸ் வார்ம் அப்... இலங்கையை நொறுக்கி இந்தியா 'சூப்பர்ப்' வெற்றி!
எட்பாஸ்டன்: விராத் கோஹ்லி மற்றும் திணேஷ் கார்த்திக்கின் அட்டகாசமான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.
334 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கை கோஹ்லி, கார்த்திக்கின் உதவியுடன் இந்தியா 49 ஓவர்களிலேயே எடுத்து சாதனை வெற்றியைப் பெற்றது.

திணேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 106 ரன்களைக் குவித்தார். கோஹ்லி 144 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தையும் திணேஷ் கார்த்திக் செம ஸ்டைலாக ஒரு பவுண்டரி அடித்து முடித்து வைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து போயுள்ளது. அங்கு நேற்று இலங்கைக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் ஆடியது. முதலி்ல் ஆடிய இலங்கை அணி இந்தியப் பந்து வீச்சை நொறுக்கி 333 ரன்களைக் குவித்தது. இதையடுத்து 334 என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
இந்தியாவின் தொடக்கம் சரிவுடன் காணப்பட்டது. 21வது ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில் கோஹ்லியும், திணேஷ் கார்த்திக்கும் இணைந்து இன்னிங்ஸை ஸ்டெடி செய்தனர்.
இருவரும் சேர்ந்து அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இவர்களின் வேகத்தைப் பார்த்து இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் குழம்பிப் போனார். இருவரையும் பிரிக்க கடுமையாக முயன்றார். 9 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை.
கோஹ்லி சரமாரியாக அடித்து விளையாடினார். 144 ரன்களை எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அவரும், கார்த்திக்கும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 186 ரன்களைக் குவித்தனர்.
கோஹ்லி 11 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் விளாசினார். மறுபக்கம் திணேஷ் கார்த்திக் 81 பந்துகளில் 106 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதில் 12 பவுண்டரிகளும், 2சிக்ஸர்களும் அடக்கம்.
கேப்டன் டோணி 17 பந்துகளில் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக சுரேஷ் ரெய்னா 31 பந்துகளில் 24 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கைத் தொட்டது.
அடுத்த வார்ம் அப் போட்டி ஜூன் 4ம் தேதி கார்டிப்பில் நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இந்தியா.
அடுத்த 2 நாட்களில் இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் தனது முதல் மெயின் போட்டியை சந்திக்கிறது இந்தியா.


Click it and Unblock the Notifications