For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் சிங் மீதான தடை ரத்து

By Staff
Harbhajan Singh

அடிலைட்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ஐசிசி மேல் முறையீட்டு ஆணையம் இன்று ரத்து செய்தது. இதையடுத்து அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 50 சதவீத ஆட்டக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது.

சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸை இனவெறி வார்த்தைகளால் ஹர்பஜன் சிங் திட்டியதாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் ஐசிசி போட்டி நடுவர் மைக் புராக்டரிடம் புகார் செய்தார்.

இதை விசாரித்த புராக்டர், ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட தடை விதித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. உடனடியாக ஐசிசி மேல் முறையீட்டு குழுவில் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை நியூசிலாந்தைச் சேர்ந்த நீதிபதி ஜான் ஹன்சன் விசாரிப்பார் என ஐசிசி அறிவித்தது. இன்று அடிலைட் பெடரல் நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெறும் என நீதிபதி ஹன்சன் நேற்று அறிவித்தார்.

இந்த விசாரணையின்போது போட்டியின்போது ஸ்டம்புகளில் வைக்கப்பட்டிருந்த மைக்ரோபோனில் பதிவானவைகளும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும் என ஹன்சன் நேற்று அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்சேபனை தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று காலை அடிலைட் நீதிமன்ற வளாகத்தில் ஹர்பஜன் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்தியத் தரப்பில் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜனின் வழக்கறிஞர் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியத் தரப்பில் கேப்டன் ரிக்கி பான்டிங், சைமண்ட்ஸ், மைக்கேல் கிளர்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு தரப்பு வக்கீல்களும் விசாரணையின்போது உடன் இருந்தனர்.

விசாரணையின்போது ரிக்கி பான்டிங், சச்சின் டெண்டுல்கர், மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ், ஹர்பஜன் சிங், மாத்யூ ஹைடன் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் நீதிபதி ஹன்சனிடம் கொடுக்கப்பட்டது.

அதில், ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ரத்து செய்து, தண்டனையைக் குறைக்குமாறு கோரப்பட்டிருந்தது.

பின்னர் விசாரணையை நடத்திய ஹன்சன், ஹர்பஜன் சிங் மீதான இனவெறி புகாரை கைவிடுவதாக அறிவித்தார். சாதாரண முறையில் திட்டியதாகவே இந்த வழக்கை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீதான 3 டெஸ்ட் தடை நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக அந்த ஆட்டத்தில் ஆட அவர் பெற்ற சம்பளத் தொகையில் பாதியை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டு முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவர் போட்டிகளில் கலந்து கொள்ளவும் தடை நீங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்த வழக்கில், ஹர்பஜனுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தால் முத்தரப்பு ஒரு நாள் தொடரிலிருந்து விலக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.

இந்தியா போட்டித் தொடரிலிருந்து விலகினால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஹர்பஜன் மீதான புகாரை திரும்பப் பெறுமாறு ரிக்கி பான்டிங்கிடம் பேசியது. இதையடுத்து ரிக்கி பான்டிங் உள்ளிட்டோர் இனவெறி குற்றச்சாட்டை கைவிடுமாறு நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணையின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீடுக்கு விரைவில் ஹன்சன் அனுப்புவார். அதன் பின்னர் தீர்ப்பு விவரத்தை முறைப்படி ஐசிசி அறிவிக்கும்.

ஹர்பஜன் விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளன. முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சிக்கலின்றி நடைபெறும் எனவும் அவை தெரிவித்துள்ளன.

தற்போது அடிலைடில் உள்ள இந்திய அணி வீரர்கள் வெள்ளிக்கிழமை மெல்போர்ன் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+