
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போகும் முதல் அணி எது என்பதை தீர்மானிக்கும் 'குவாலிபயர் 1' போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே சென்னை அணிதான் ஆதிக்கத்தை செலுத்தியது.
கடைசி வரைக்கும் அந்த ஆதிக்கத்தை விடாமல் கடைசியில் மும்பையை துவம்சம் செய்து இறுதிச் சுற்றில் நுழைந்தது. இந்த வெற்றியை சென்னையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். ஆங்காங்கே பெரிய திரைகளில் போட்டியை கண்டு ரசித்த வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் வெற்றி திரும்பியபோதிலிருந்தே பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர்.
வெற்றி பெற்ற உடன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு செம விசில் அடிங்க என்று உற்சாக குரல் எழுப்பினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோற்ற மும்பை அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அணி, சன்ரைசர்ஸ் , ராயல்ஸ் அணிகளிடையே புதன்கிழமை நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 'குவாலிபயர் 2' போட்டியில் 24ம் தேதி மோத வேண்டும். இறுதிப் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 26ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த முறை தவறவிட்ட ஐ.பி.எல் கோப்பையை இந்தமுறை சென்னைதான் வெல்லும் என்று இப்போதே உறுதியாக கூற ஆரம்பித்துவிட்டனர் சென்னை ரசிகர்கள். 6 முறை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 5 முறை இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது. இதில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறை கோப்பையை வென்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்பது சென்னை ரசிகர்களின் விருப்பமாகும்.