சென்னை முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. சேப்பாக்கம் பிட்ச் சுத்தமாக பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாததால், ஆரம்பத்திலிருந்தே தென் ஆப்பிரிக்க வீரர்களும், இந்திய வீரர்களும் சரமாரியாக ரன்களைக் குவித்து வந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 540 ரன்களை எடுத்து. ஹாஷிம் அம்லா சதம் அடித்தார். ஸ்மித் 73 ரன்களை சேர்த்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி வரலாறு காணாத ரன் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக வீரேந்திர ஷேவாக் ஆடி ரன் ருத்ரதாண்டவத்த்தால், சேப்பாக்கமே கிடுகிடுத்தது. அபாரமாக ஆடிய ஷேவாக் 319 ரன்களைக் குவித்து விட்டுத்தான் ஓய்ந்தார்.
அதேபோல ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களையும் கடந்து சாதனை படைத்தார்.
இறுதியில் இந்திய அணி 627 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தனது 2வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது.
இந்த இன்னிங்ஸிலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன்களைக் குவித்தனர். கேப்டன் ஸ்மித் 35 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் மெக்கன்சி அபாரமாக ஆடி சதம் போட்டார். அம்லா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கல்லிஸ் இந்த முறையும் சரியாக ஆடவில்லை. டக் அவுட் ஆனார்.
ஆட்டம் எந்த முடிவையும் தராது என்ற நிலை நிலவியதால், இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்தனர். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
ஆட்டம் டிரா செய்யப்பட்டபோது மெக்கன்சி 155 ரன்களுடனும், பௌச்சர் 11 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications