டெல்லி: இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி எந்தவித அச்சமும் இல்லாமல் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஒரு நாள் போட்டித் தொடரை ரத்து செய்து விட்ட இங்கிலாந்து அணி, பாதுகாப்பு குறித்து திருப்தி இருந்தால்தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும் என அறிவித்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு தைரியம் அளிக்கும் வகையில் மும்பையில் நடைபெறுவதாக இருந்த 2வது டெஸ்ட் போட்டியை தற்போது சென்னைக்கு மாற்றுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி அச்சமின்றி ஆட முடியும். எனவே திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடையே நீண்ட நேரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மும்பையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியை வேறு நகருக்கு மாற்றினால், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள ஒரு மைதானத்துக்கு மாற்றினால் மீண்டும் இந்தியா வருவது குறித்து பரிசீலிப்போம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்தே மும்பை போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும்.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை திட்டமிட்டபடி அகமதாபாத்தில் நடைபெறும்.
பரோடாவில் இங்கிலாநது அணிக்கும், போர்ட் பிரசிடென்ட் லெவன் அணிக்கும் இடையே டிசம்பர் 5 முதல் 7 வரை மூன்று நாள் பயிற்சிப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு நாள் தொடரை ரத்து செய்து விட்ட இங்கிலாந்து அணி இன்று இரவு பெங்களூரிலிருந்து தாயகம் திரும்புகிறது.