3வது டெஸ்ட்: இந்தியா தோல்வி-தொடரை வென்ற இலங்கை
கொழும்பு: கொழும்பில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை, இலங்கை தோற்கடித்தது. 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.
கொழும்பில் நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது இந்தியாவை விட 147 ரன்கள் அதிகமாகும்.
பின்னர் இந்தியா ஆடத் தொடங்கியது. ஷேவாக் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தார். வந்த பந்துகளையும் விளாசித் தள்ளிய அவருடன் இணைந்து கம்பீரும் வேகமாக ஆடினார்.
வேகம் விவேகம் அல்ல என்பதைப் போல இந்தியா வேகமாக விக்கெட்டுகளை இழக்கஆரம்பித்தது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இந்தியா 5 விக்கெட்களை இழந்து 161 ரன்களை எடுத்திருந்தது. டிராவிட் 46 ரன்களுடனும், லட்சுமண் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கம்பீர் 26, ஷேவாக் 34 ரன்கள் எடுத்திருந்தனர். மூத்த வீரர்களான சச்சின், கங்குலி ஆகியோர் சொதப்பினர்.
இந்த நிலையில் இன்று காலை இந்தியா தனது ஆட்டத்தை தொடர்ந்தது. டிராவிட் இன்று அரை சதம் எடுத்தார். நிதானமாக ஆடி 68 ரன்களை சேர்த்த டிராவிட் மெண்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கும்ப்ளே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். வி.வி.எஸ். லட்சுமண் பொறுமையாக ஆடி 61 ரன்களை எடுத்தார். பின்னர் வந்தவர்களில் ஹர்பஜன் சிங் சற்று ஆடி 26 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில், இந்தியா 268 விக்கெட்களுக்கு இன்னிங்ஸை இழந்தது.
வழக்கம்போல இந்த முறையும் மெண்டிஸே இந்தியாவுக்கு எதிரியாக அமைந்தார். முக்கியமான 3 விக்கெட்களை மெண்டிஸ் வீழ்த்த, முரளிதரன் தன் பங்குக்கு 3 விக்கெட்களை சாய்த்தார். பிரசாத் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை ஆடத் தொடங்கியது. வான்டார்ட் 8 ரன்களில் அவுட் ஆக, வர்னபுராவும், சங்கக்காராவும் சேர்ந்து ஆடத் தொடங்கினர். ஆனால் சங்கக்காரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வர்னபுராவுடன், கேப்டன் ஜெயவர்த்தனே ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
வர்னபுரா 54 ரன்களும், ஜெயவர்த்தனே 50 ரன்களும் எடுத்தனர். 2 விக்கெட்களை மட்டும் இழந்து 123 ரன்களை எடுத்து இலங்கை வெற்றி பெற்று, தொடரையும் வென்றது.


Click it and Unblock the Notifications