இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
ஜெய்ப்பூர்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவால் மான்சிங் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடந்தது.
ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் இந்திய அணியின் மூத்த வீரர்களான கங்குலி, ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, ஸ்ரீசாந்த் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி துவக்கத்தில் சற்று திணறியது. 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டும் எடுத்திருந்தபோது, கேப்டன் சோயப் மாலிக் மற்றும் சக வீரர் முகமது யூசுப் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 168 ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 306 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் 89 ரன்களும், முகமது யூசுப் 74 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான், முரளி கார்த்திக் மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 307 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சச்சின், காம்பீர், உத்தப்பா மற்றும் சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின் களமிறங்கிய ரோஹித் சர்மா-யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்து பொறுமையுடன் விளையாடினர். ஆனால் 28வது ஓவரில் ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் டோணி, யுவராஜூடன் ஜோடி சேர்ந்தாலும் இவர்கள் வெகுநேரம் நீடிக்கவில்லை. டோணி 24 ரன்களுக்கும், யுவராஜ் 50 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து ஆட வந்த இர்பான் பதான் அதிரடி ஆட்டம் ஆடி எதிரணியை மிரட்டினாலும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
89 ரன்கள் எடுத்த கேப்டன் சோயப் மாலிக்கிற்கும், 74 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் முகமது யூசுப் ஆகிய இருவருக்கும் ஆட்டநாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியதால் கோப்பையை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications