கங்குலிக்கு எதிராக கும்ப்ளே சதி?

சமீபத்தில் இலங்கையுடன் நடந்த ஒரு நாள் போட்டிக்கான அணியில் கங்குலி இடம் பெறவில்லை. அதேபோல நடைபெறவுள்ள இராணி கோப்பைப் போட்டிக்கான அணியிலும் அவருக்கு இடம் தரப்படவில்லை. இனிமேல் அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்ற பேச்சும் நிலவுகிறது.
இந்த நிலையில் கங்குலி நீக்கத்திற்கு கும்ப்ளேவும், கிர்ஸ்டனும்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக தேர்வுக் குழுத் தலைவர் வெங் சர்க்காரை சந்தித்த கும்ப்ளேவும், கிர்ஸ்டனும், கங்குலியை அணியில் சேர்க்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.
இதை ஏற்ற வெங்சர்க்கார் தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்களிடம் இதுகுறித்துப் பேசி கங்குலியை நீக்க முடிவு செய்தாராம்.
மேலும் கங்குலியை நீக்கியது குறித்த தகவலை அவரிடம் முறைப்படி வெங்சர்க்கார் தெரிவிக்கவில்லை. பத்திரிக்கை செய்திகளைப் பார்த்துத்தான் கங்குலி தனது நீக்கம் குறித்து அறிந்து கொண்டாராம்.
கங்குலியை நீக்க கும்ப்ளே, கிர்ஸ்டன், வெங்சர்க்கார் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
2 ஆண்டுகள் விளையாட முடியும்-கங்குலி:
இதற்கிடையே தனக்குள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஆடக் கூடிய திறமை இருப்பதாக கூறுகிறார் கங்குலி.
லண்டனிலிருந்து வெளியாகும் சன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கலாம். அதேசமயம், நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், டுவென்டி 20 போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெற விரும்பவில்லை. அவசரப்படவில்லை.
இன்னும் 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆடக் கூடிய திறமை என்னிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அணியில் இடம் இல்லாததால், எதையும் இழந்ததாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் ஒரு செஞ்சுரி அடிப்பதையோ அல்லது ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதையோ நான் மிஸ் பண்ணுவதாக நினைக்கிறேன்.
தற்போதைக்கு நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகளிலும் நான் இருக்கிறேன்.
சீனியர்கள் உணர வேண்டும்:
நான் ஒரு நாள் போட்டிகளில் இல்லை. ஆனால் 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் நான் உள்பட எந்த மூத்த வீரரும் பங்கேற்க முடியாது என்ற நிதர்சனத்தையும் நான் உணர்ந்துள்ளேன். மற்ற சீனியர் வீரர்களும் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
இப்போது இளம் வீரர்கள் விளையாட்டு அனுபவத்தை பெற வேண்டிய நேரம். அதை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கங்குலி கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications