லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று, பாகிஸ்தானுக்கு வந்து விளையாட ஆஸ்திரேலிய அணி தயக்கம் காட்டி வருகிறது. இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துபாயில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூடி பேசவுள்ளனர்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் தங்களது அணியினருக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே அங்கு விளையாடுவது குறித்து மறு பரிசீலனை செய்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா இப்போட்டித் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐசிசி விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நடவடிக்கை அதிகாரி சஃபாகத் நக்மி கூறுகையில், துபாயில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐசிசி மூத்த அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். இத்தகவலை ஐசிசியின் தற்காலிக தலைமை செயலதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த அறிக்கை, பாகிஸ்தான் மீதான, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாடுகள் மீதான சில நாடுகளின் அச்சத்தையும், சந்தேகத்தையும் துடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, ஆகிய நகரங்களில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐசிசியின் குழு ஒன்று நேரில் ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.