பெங்களூர்: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,டோணியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வென்றது. இதன் மூலம் ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வென்று அசைக்க முடியாத அணியாக டோணியின் சென்னை அணி உருவெடுத்துள்ளது.
ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூரில் நடந்த போட்டியில் வீழ்த்தி அட்டகாசம் செய்துள்ளது டோணி தலைமையிலான சென்னை அணி.
நேற்றைய போட்டியில், முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்ரகளான பார்த்திவ் படேல் 21 ரன்களும், மாத்யூ ஹைடன் 13 ரன்களும் சேர்த்தனர்.
அதன் பின்னர் இறங்கிய ஹூஸே 47 ரன்களைக் குவித்தார். ஆனால் கேப்டன் டோணியின் ஆட்டத்தில் தான் அணல் பறந்தது. அதிரடியாக ஆடிய அவர் 30 பந்துகளில் 65 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம்.
சுரேஷ் ரெய்னாவும் தன் பங்குக்கு 28ரன்களைக் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை சேர்த்தது ெசன்னை அணி.
இதையடுத்து ஆடிய பெங்களூர் அணி தொடக்க வீரர் சிப்ளியை 8 ரன்களுக்கு இழந்தது. இருப்பினும் வாசிம் ஜாபரும், டெய்லரும் சிறப்பாக ஆடினர். இதனால் அணிக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியது.
ஜாபர் 50 ரன்களும், டெய்லர் 53 ரன்களும் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின்னர் வந்த வீரர்கள் சரிவர ஆடவில்லை. கல்லிஸ் 14 ரன்களும், பெளச்சர் 4 ரன்களும் சேர்த்தனர். டிராவிட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களில் சுருண்டது பெங்களூர் அணி. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இப்போட்டித் தொடரில் படு மோசமாக விளையாடி வருவது மும்பை அணி மட்டுமே. இன்றைய ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணியை மும்பை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.