நேப்பியர்: கேப்டன் டோணி, ஷேவாக், ரெய்னா அதிரடியாக விளையாட நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நேப்பியரில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக ஓவர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைக்கப்பட்டது. காயம் காரணமாக இஷாந்த் சர்மா பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக பிரவீண் குமார் விளையாடினார்.
துவக்க வீரராக வந்த ஷேவாக் வழக்கம் போல் சிக்சர், பவுண்டரிகள் அடித்து அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 23 பந்தில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து கம்பீர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் டோணி வந்தார். பொறுப்புடன் விளையாடிய இவர் ஷேவாக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.
ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டிய ஷேவாக் 56 பந்தில் 77 ரன்கள் எடுத்து வெட்டோரி சூழலில் வெளியேறினார். அடுத்து வந்த யுவராஜ் 2 ரன்கள் எடுத்தநிலையில் அவசரப்பட்டு ரன்-அவுட்டானார். சிறப்பாக விளையாடிய டோணி அரைசதம் கடந்தார்.
ரெய்னா சூப்பர் ஆட்டம்
ஐந்தாவது வீரராக வந்த ரெய்னா சிக்சர் மழை பொழிந்தார். இவர் 4 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 39 பந்தில் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான், நியூசிலாந்து பந்துவீச்சை ஒரு கைபார்த்தார்.
இந்திய அணி 38 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. டோணி 84, யூசுப் பதான் 10 பந்தில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
28 ஓவரில் 216 ரன்...
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 38 ஓவரில் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களுக்கு பிரவீண் குமார் அதிர்ச்சி அளித்தார். இவர் இரண்டு டுவென்டி-20 போட்டியிலும் அதிரடி காட்டிய மெக்கலத்தை 'டக்' அவுட்டாக்கினார். மற்றொரு துவக்க வீரர் ரைடரை 11 ரன்களுக்கு வெளியேற்றினார்.
இந்நிலையில் மீண்டும் மழை வந்தது. இதையடுத்து 28 ஓவரில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்துக்கு இரண்டாவது முறையாக இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய குப்தில் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். இவர் 64 ரன்களுக்கு ஹர்பஜன் பந்தில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டானார்கள்.
நியூசிலாந்து 28 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி வரும் 6ம் தேதி வெல்லிங்டனில் நடக்கிறது.