இந்திய அணி அறிவிப்பு: தோணிக்கு ஓய்வு-மீண்டும் மும்மூர்த்திகள்!

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் தோணி தலைமையிலான இந்திய அணி இலங்கையிடம் பரிதாபத் தோல்வியுற்று கோப்பையை நழுவ விட்டது.
ஆசிய கோப்பை தொடரின்போது வீரர்களுக்கு ஓய்வே இல்லாத வகையில் ஷெட்யூல் போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் தோணி. இதற்கு இந்திய கிரிக்ெகட் வாரியம் பதிலடி கொடுத்திருந்தது. ஓய்வு வேண்டும் என்றால் போட்டியில் ஏன் பங்கேற்க வேண்டும் என்று தோணியை அது வாரியிருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் தான் விளையாடவில்லை என்றும், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் தோணி தெரிவித்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது. தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளே உள்ளார். துணை கேப்டனாக தோணி உள்ளார். அவர் ஓய்வு தேவைப்படுவதாக கூறியுள்ளதால், ஷேவாக் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 16 பேர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை.
மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். லட்சுமணும் திரும்பியுள்ளார்.
அதேபோல ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்ததற்காக தடை விதிக்கப்பட்டிருந்த ஹர்பஜன் சிங் தடை காலம் முடிவடைந்து மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அணி விவரம்:
அனில் கும்ப்ளே (கேப்டன்), வீரேந்திர ஷேவாக் (துணை கேப்டன்), கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமண், ரோகித் சர்மா, திணேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான், ஆர்.பி.சிங், முனாப் படேல், பிரக்யான் ஓஜா.
இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications