
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்திடம் தூக்கிக் கொடுத்து விட்டது இந்தியா என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தா போட்டி குறித்து கேப்டன் டோணி கருத்து தெரிவிக்கையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன், அணியில் ஒரு வீரராக இருக்கிறேன் என்பதை எளிதாக கூறி விட முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக அமையும். எனவே எனது பொறுப்பை உதறி விட்டு ஓடி விட மாட்டேன்.
கிரிக்கெட் வாரியம் உள்ளது, நிர்வாகிகள் உள்ளனர், தேர்வாளர்கள் உள்ளனர். அவர்கள் முடிவெடுக்கட்டும். அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
அணியை ஒருங்கிணைத்து அடுத்த போட்டிக்குத் தயாராக்குவதே எனது இப்போதைய முக்கியப் பணி. அந்தப் பொறுப்பை நான் முறையாகச் செய்ய முயல்வேன்.
ஒரு கேப்டனாக, இது எனக்குச் சவாலான தொடராக மாறியுள்ளது. ஒரு அணி தடுமாறும்போது நிச்சயம் கேப்டனுக்கு கூடுதல் பொறுப்புகள் வரவே செய்யும். எனக்கும் அப்படித்தான்.
கொல்கத்தா தோல்விக்கு பேட்டிங் சரியில்லாமல் போனதும் முக்கியக் காரணம். பேட்டிங்கில் நாம் தோற்று விட்டோம். அதைச் சரி செய்து கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராக வேண்டும் என்றார் டோணி.