இந்தூர்: இந்தூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, அங்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்து சுட்டு பயிற்சி செய்த தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது.
இப்போட்டிக்கு முன்பாக அபிஷேக் பச்சன்,பிரியங்கா சோப்ரா நடித்த "தோஸ்தானா' இந்திப் படத்தை பார்க்க தோனி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
ஏமாற்றமடைந்த டோணிக்கு தியேட்டருக்கு அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் இருப்பது தெரிய வந்தது. துப்பாக்கிச் சுடுதலில் அதிக ஆர்வம் கொண்டவர் டோணி.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரின் முகாமிற்கு சென்று ஏ.கே.47 உள்ளிட்ட பல்வேறு வகையான துப்பாக்கிகளில் பயிற்சி பெற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து பயி்சி முகாமின் டி.எஸ்.பி. ராஜேஷ் வியாஸ் கூறுகையில், நவ.,16ல் இந்திய அணி இந்தூர் வந்த போது கேப்டன் தோனி திடீரென "தோஸ்தானா' படம் பார்க்க வேண்டுமென்றார்.
இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பு கருதி தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டாம் என அணியின் அதிகாரிகளுள் ஒருவரான ரசல் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து துப்பாக்கி சுடுதல் முகாமிற்கு செல்ல அனுமதி கோரினார். வீரர்கள் தங்கியிருந்த உஜ்ஜைனி ரோட்டின் அருகில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாமிற்கு அழைத்து சென்றோம்.
அங்கு ஏ.கே. 47, இன்சாஸ் போன்ற அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி டோனி சிறப்பு பயிற்சி மேற்கொண்டார் என்றார்.
அடுத்து கிரிக்கெட் ஆட்டத்தின்போது தீவிரவாதிகள் மைதானத்திற்குள் புகுந்தால் 'கேப்டன்' டோணி டுமீல் விட்டு தீவிரவாதிகளை விரட்டி அடிப்பார், புரட்டி எடுப்பார் என நம்பலாம்.