டோணி கூறியதால் கங்குலி நீக்கம்: பெங்கால் கிரிக்கெட் சங்கம்

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் கங்குலி நீக்கம்தான் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் கங்குலி. மேலும் கடந்த ஆண்டு முழுவதும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். சச்சினுக்குப் பின்னர் அதிக ரன்கள் குவித்து சிறந்த நிலையில் இருக்கிறார்.
வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தைரியமாக விளையாடக் கூடிய கங்குலியை, ஒரு நாள் அணியில் சேர்க்காமல் தேர்வுக் குழு நீக்கியது பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. கங்குலி நீக்கத்திற்கான காரணத்தை கிரிக்கெட் வாரியம் தெளிவாக கூறவில்லை.
ஆனால் கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட டோணிதான் காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது. கங்குலி வேண்டாம் என்று டோணி கூறியதால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் பிரசுன் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதை கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரே தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் முகர்ஜி பேசுகையில், கங்குலி விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரிடம் பேசினேன். அதற்கு அவர், தேர்வுக் குழு நடவடிக்கைகளில் வாரியம் தலையிடக் கூடாது என்பது கொள்கை முடிவு. எனவே அணித் தேர்வு குறித்து நான் தலையிட முடியாது.
கங்குலி விவகாரம் குறித்து நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியபோது, கேப்டன் தலையீட்டின் பேரிலேயே கங்குலி சேர்க்கப்படவில்லை என்று தெரிய வந்தது. உங்களது கவலைகளையும், ஏமாற்றத்தையும் உரியவர்களிடம் நான் தெரிவிக்கிறேன் என்றார்.
மேலும் கங்குலி நீக்கத்திற்கு சரத் பவாரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளியிட்டார். ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடியவர் கங்குலி என்றும் பவார் தெரிவித்தார்.
ஒரு அணி வெற்றி பெற யார் தேவை என்பதை கேப்டன் முடிவு செய்வதில் தவறில்லை. அவருடைய மனதில் ஏதாவது திட்டம் இருக்கலாம். ஆனால், கங்குலி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்த பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரை அணியில் சேர்க்கத் தயங்கியது ஏன்.
டெஸ்ட் போட்டியில் மட்டுமல்லாது, ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் கங்குலி. சிறப்பாக விளையாடியும் வருகிறார்.
டோணிதான், கங்குலியை வேண்டாம் என்று கூறியது உண்மையாக இருக்குமானால், மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாட அவர் பயப்படுகிறார் என்றுதான் அர்த்தம். அவரிடம் தைரியம், நம்பிக்கை இல்ைல என்றுதான் அர்த்தம்.
மூத்த வீரர் அணியில் இருந்தால், ஆதிக்கம் செலுத்த முடியாமல் போகுமே என்ற பயம் அவரிடம் இருப்பதாக நான் உணர்கிறேன்.
தான் நினைத்த வீரர்கள் இருக்க வேண்டும் என டோணி விரும்புகிறார். தான் சொல்வதைக் கேட்கக் கூடிய வீரர்கள் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் கங்குலி அணியில் இருந்திருந்தால் நிச்சயம், அணிக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்றார் முகர்ஜி.
கங்குலி விவகாரத்தில் டோணியின் பெயர் அடிபடுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications