இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு
டெல்லி: ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று டெல்லியில் பிரமாண்ட, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதித்த முதல் வெற்றி சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்புத் தொடர். இந்த சாதனையைப் படைத்த இந்திய அணி, இன்று டெல்லி திரும்பியது.
முதலில் மும்பை வந்த இந்திய அணி வீரர்கள், தனி விமானம் மூலம் பிற்பகல் 2.05 மணிக்கு டெல்லி பயணமானார்கள். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து இந்திய வீரர்களை வரவேற்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் டோணியையும், மற்ற வீரர்களையும் வரவேற்றனர்.
பின்னர் தனிப் பேருந்து மூலம் வீரர்கள் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
டெல்லி துணை நிலை ஆளுநர் ராஜேந்திர சிங், கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார் ஆகியோர் இதில்கலந்து கொண்டனர்.
கேப்டன் டோணிக்கு ராஜேந்திர சிங் நினைவுப் பரிசினை வழங்கினார். பின்னர் ஏற்கனவே கிரிக்கெட் வாரியம் அறிவித்த ரூ. 10 கோடி போனஸ் தொகைக்கான காசோலைகள் அனைத்து வீரர்களுக்கும் அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications