டெல்லி: கேப்டனாக, டோணிக்கு வெளிநாட்டு ஆடுகளங்களில்தான் உண்மையான சோதனை காத்திருக்கிறது. அங்கு வென்றால்தான் அவர் தனது திறமையை நிரூபிக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
டெல்லி வந்த கங்குலி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் டோணி. ஆனால் ஒரு கேப்டனாக, உண்மையான சோதனை அவருக்கு வெளிநாட்டு ஆடுகளங்களில்தான் உள்ளது.
இந்தியாவை இந்தியாவில் வெல்வது நிச்சயம் கடினமான ஒன்றுதான். எனவே இந்தியாவைத் தாண்டியும் டோணி வென்று காட்டுவதுதான் உண்மையான சாதனையாகும் என்றார் கங்குலி.
டோணி தலைமையில் இந்திய அணி விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமை இன்று வரை கங்குலியிடம்தான் உள்ளது. கங்குலி தலைமையில் 49 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய இந்திய அணி 21 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.