ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சிபு சோரன் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் கமாண்டோ வீரர்களையும் ஈடுபடுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வரின் பத்திரிக்கைத் தொடர்பாளர் சபீக் அன்சாரி கூறுகையில், டோணியின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யுமாறு டிஜிபி வி.டி.ராமுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு தற்போதுள்ள பாதுகாப்பை நீக்கி விட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்பை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் கமாண்டோ பாதுகாப்பையும் அளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார் என்றார் அவர்.
கடந்த 4ம் தேதி சென்னைக்கு செல்வதற்காக மும்பைக்கு சென்ற டோணி, எந்தவித பாதுகாப்பும் இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆயுதப் போலீஸ் பாதுகாப்பை அளிக்குமாறு டிஜிபிக்கு சிபு சோரன் உத்தரவிட்டுள்ளார்.
டோணிக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னைச் சுற்றிலும் ஏராமான போலீஸார் இருப்பதை டோணி விரும்பவில்லை.
ஆனால் டோணிக்கு இதுவரை இசட் பிரிவின் கீழ் முழு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. ஒப்புக்குத்தான் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார் டோணியின் முன்னாள் பயிற்சியாளரான சான்சால் பட்டச்சார்யா.
நக்சலைட் மிரட்டலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டோணிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.