போபால்: நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரை வென்ற டோணி தலைமையிலான அணி தான் இந்திய வரலாற்றில் மிகசிறந்த அணி என முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பாராட்டியுள்ளார்.
டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்ப்ற்றி புதிய சரித்திரம் படைத்தது. இதையடுத்து இந்திய அணி தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் பட்டோடி தனது சொந்த ஊரான போபலில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
டோணியின் அணி தான் இந்திய வரலாற்றிலே தலைசிறந்த அணி. அடுத்து நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது. இந்திய வீரர்கள் சொந்த சாதனைக்காக விளையாட கூடாது. அணியின் நலனை கருத்தில் கொள்வது அவசியம். இது தொடர்ந்தால் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக திகழும்.
இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் திறமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஹாக்கியில் அரசியல்...
அரசியல் காரணமாக இந்திய ஹாக்கி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படும் வரை இந்திய ஹாக்கியில் வளர்ச்சி என்பதை எதிர்பார்க்க முடியாது. இப்பிரச்சினைக்கு வீரர்களின் மூலம் தான் நல்ல தீர்வு கிடைக்க முடியும். வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சர்வதேச அளவில் ஜொலிக்க வேண்டும் என்றார்.