'பார்ட்டி': சிக்கலில் யுவராஜ், ரெய்னா, ரோஹித்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம். அதிலும் தென் மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்கள், என்னதான் திறமை காட்டினாலும், அசத்தலாக ஆடினாலும் அணியில் இடம் பிடிப்பதற்குள் அவர்களது திறமையே மங்கிப் போய் விடும்.
அப்படி ஒரு நிலையில் இந்திய கிரிக்கெட் உள்ளது. ஆனால் அணியில்இடம் கிடைத்து உள்ளே புகுந்த பின்னர் சில வீரர்கள் செய்யும் சேஷ்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விடுகிறது. விளையாடுகிறார்ளோ இல்ைலயோ மற்ற 'எக்ஸ்ட்ரா கரிகுலர்' வேலைகளில் 'கிங்' ஆக இருக்கிறார்கள்.
விளம்பரங்களில் நடித்து பணம் குவிப்பது, காதலிப்பது, காதலிகளை மாற்றுவது என சகல காரியங்களிலும் கவனத்தை முழுவதும் திருப்பி விடுகிறார்கள்.
இதுபோன்ற சேஷ்டைகளில் அதிகம் ஈடுபடுவது தென்னகத்து வீரர்கள் இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. கிரிக்கெட் வாரியத்திடமோ அல்லது கேப்டனிடமோ தங்களது செல்வாக்கை வளர்த்து வைத்துக் கொண்டு இந்த வீரர்கள் அடிக்கும் கொட்டம், கிரிக்கெட் ஆட்டத்தையே உயிராக நினைத்து பணம் செலவழித்து, அடித்துப் பிடித்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்து, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் (வீரர்களை விட இவர்களுக்குத்தான் அதிகம் இருக்கும்) ரசித்துப் பார்க்கும் ரசிகர்களின் நெஞ்சில் ரத்தம் கசிய வைக்கும்.
அப்படி ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு கராச்சியில் அரங்கேறியுள்ளது. இந்தியா முழுவதும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறது - இலங்கையை வென்று ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்ற கேள்வியுடன்.
ஆனால் இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்கள், அதுகுறித்து கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல், தண்ணி அடித்து தாறுமாறான கொண்டாட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மும்மூர்த்திகள் வேறு யாருமல்ல - பிரின்ஸ் என செல்லமாக போஷிக்கப்படும் யுவராஜ் சிங், எதிர்காலத்தில் இவர்தான் இந்திய அணியை தூக்கிப் பிடிக்கப் போகிறார் என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் 'எப்படியோ' அணிக்குள் நுழைந்து விடும் ரோஹித் சர்மாதான் அந்த சர்ச்சை நாயகர்கள்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டி கராச்சியில் நடந்தது. போட்டிக்கு முதல் நாள் இரவு இந்த மூன்று பேரும், அங்குள்ள புகழ் பெற்ற பிரெஞ்சு கடற்கரைக்கு தங்களது உள்ளூர் நண்பர்களுடன் போயுள்ளனர். அந்த கடற்கரை, பெரிய பெரிய பணக்காரர்கள் உல்லாசமாக, உற்சாகமாக விடிய விடிய 'விருந்தில்' திளைத்துக் கிடக்கும் ஏரியா.
அப்படிப்பட்ட கடற்கரைக்குப் போன இந்த மூன்று வீரர்களும் விடிய விடிய மது அருந்தியும், பாட்டுப் பாடியும், ஆட்டமாடியும் ஜாலியாக இருந்துள்ளனர். அதிகாலையில்தான் மப்பு தெளியாத நிலையில் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவும், இலங்கையும் மோதிய இறுதிப் போட்டி தொடங்கியது.
மப்பு, முழுவதுமாக தெளியாத நிலையில் இந்த மூன்று பேரும் ஆடியுள்ளனர். இவர்களில் யுவராஜ், 2 பந்துகளை சந்தித்து 'முட்டை' போட்டு விட்டு பெவிலியன் திரும்பினார். ரெய்னா கொஞ்சம் போல நிலைத்து நின்று 16 ரன்கள் போதும் என்றதிருப்தியுடன் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 3 ரன்களே போதும் என்று திரும்பி விட்டார்.
முதல் நாள் மது விருந்தால் களைப்படைந்து போனதே இவர்கள் மூன்று பேரும் சரிவர விளையாடாமல் போனதற்கு முக்கிய காரணம். இத்தனைக்கும் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்தனர் இந்த மூன்று பேரும்.
ஆனால் பிரெஞ்சு கடற்கரை மது விருந்தால் மூன்று பேரும் தளர்ந்து போய் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவரங்களை பாகிஸ்தானின் 'ஜங்' பத்திரிக்கை புட்டுப் புட்டு வைத்து அப்பாவி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களை சிதறடித்துள்ளது.
எத்தனையோ இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கிடக்கும் நிலையில் அணியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள இந்த மூன்று பேரும் இப்படி கடற்கரைக்குப் போய், அதிலும் முக்கியமான இறுதிப் போட்டிக்கு முதல் நாள் இரவில், ஆட்டம் போட்டு பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வழக்கம் போல வீரர்களுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த சம்பவம் குறித்து அணி நிர்வாகம் புகார் ஏதும் தரவில்லை.எனவே விசாரணைக்கு அவசியம் இல்லை என்று படு தெனாவட்டாக கூறியுள்ளது கிரிக்கெட் வாரியம்.
நமக்காக ஒரு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில் தேவை தூக்கி தூரப் போடுவார்கள். ஆனால், இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட வீரர்கள் குறித்து விசாரிக்கக் கூட மாட்டார்கள்.
என்ன கொடுமை சார் இது?
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications