டெல்லி: ஊக்க மருந்து உட்கொண்டதற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற அஸ்வினி அக்குஞ்சி உள்ளிட்ட ஆறு தடகளவீராங்கனைகளுக்கு ஓர் ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய போதை மருந்து தடுப்பு கழகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அஸ்வினி அக்குஞ்சி, சினி ஜோஸ், மந்தீப் கவுர், ஜூவான் முர்மு, பிரியங்கா பன்வார் மற்றும் மேரி டியானா தாமஸ் ஆகியோர் போட்டியின் போது ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. அதனை வீரர்கள் அனைவரும் மறுத்தனர். இந்நிலையில் அந்த 6 பேரும் ஊக்க மருந்து உட்கொண்டனரா என்று சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த 6 வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் 6 பேருக்கும் தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு தீர்ப்பளித்துள்ளது. இந்த குழுவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தினேஷ் தயாள், டாக்டர் என்.கே.காதியா மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர் அசோக் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பயிற்சியாளர் யூரி ஓகோரோட்நிக்கும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவராவார்.