டிராவிட் 'அவுட்' - ஷேவாக் இன்!
அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் 'அவுட் ஆப் பார்ம்' வீரேந்திர ஷேவாக்கை இந்தியத் தேர்வுக்குழு சேர்த்துள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்கான அணித் தேர்வு நேற்று அமகதாபாத்தில் நடந்தது.
இதில் டோணி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
இந்த அணியில், இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கர் காரணம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சமீப காலமாக சிறப்பாக விளையாடாத வீரேந்திர ஷேவாக்குக்கு மீண்டும் இடம் கொடுத்துள்ளனர். திறமையான வீரர், முன்பு பலமுறை சிறப்பாக விளையாடியுள்ளார் என்று இதற்கு காரணம் கூறியுள்ளார் வெங்சர்க்கார்.
அணியில் புதுமுகமாக உ.பி. வேகப் பந்துவீச்சாளர் பிரவீண் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக பந்து வீசி தனது திறமையை நிரூபித்தார்.
அதேசதமயம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் பத்ரிநாத்துக்கு அணியில் இடம் தரப்படவில்லை. இவரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பான பேட்டிங்கை நிரூபித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணேஷ் கார்த்திக் நீக்கம்:

இதேபோல தமிழக வீரர் திணேஷ் கார்த்திக்கும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அணித் தேர்வில் மிகப் பெரிய ஆச்சரியம் ஷேவாக்குக்கு மீண்டும் தரப்பட்டுள்ளதுதான். சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி ஆடாதவர் ஷேவாக். அவருக்குத் தரப்பட்ட சில வாய்ப்புகளையும் கூட சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பியவர்.
ஷேவாக் மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன் என்று வெங்சர்க்கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிராவிடுக்கு நாங்கள் ஓய்வு கொடுத்துள்ளோம். அவர் சிறப்பான வீரர். மீண்டும் அணிக்குத் திரும்பி வருவார். இன்னும் அவரிடம் நாங்கள் பேசவில்லை. அவருக்கு இது ஒரு பிரேக்தான்.
ஷேவாக் சிறந்த வீரர். தொடக்க வீரராக பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அவர் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவேதான் அவருக்கு இடம் தரப்பட்டுள்ளது.
தமிழக பத்ரிநாத்தையும் நாங்கள் தீவிரமாக பரிசீலித்தோம். இருப்பினும் 15 பேருக்கே இடம் தர முடியும் என்பதால் அவரை சேர்க்க முடியவில்லை. வெற்றி பெறக் கூடிய அணியையே நாங்கள் தேர்வு செய்துள்ளோம் என்றார்.
வீரர்கள் தேர்வின்போது கேப்டன் டோணி அங்கு இல்லை. இருப்பினும் அவருடன் தொலைபேசியில் கலந்து பேசிய பின்னரே அணி இறுதி செய்யப்பட்டதாக வெங்சர்க்கர் தெரிவித்தார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி நவம்பர் 5ம் தேதி குவஹாத்தியில் நடக்கும் போட்டி, 8ம் தேதி மொஹாலியில் நடக்கும் போட்டிகளுக்கானது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. டோணியையே டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக்க தேர்வுக்குழுவில் தயக்கம் காணப்படுகிறது. காரணம், அவருக்கு அதிக அனுபவம் இல்லை என்பதால். இதனால் டெண்டுல்கருக்கு கேப்டன் வாய்ப்பு போகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விவரம்:
எம்.எஸ்.டோணி (கேப்டன்), யுவராஜ் சிங், கெளதம் காம்பீர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக், ராபின் உத்தப்பா, இர்பான் பதான், ஆர்.பி.சிங், ரோஹித் சர்மா, முரளி கார்த்திக், ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், பிரவீண்குமார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications