மொஹாலி: மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸை 453 ரன்களுக்கு இழந்தது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாக டிராவிட் சதமடித்தார்.
மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று இந்தியா நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தது. ஷேவாக் டக் அவுட் ஆன நிலையில் கம்பீரும், டிராவிடும் பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
கம்பீர் சிறப்பாக ஆடி சதமடித்தார். அதேபோல டிராவிடும் நிதானமாக ஆடி அரை சதம் போட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு டிராவிட் சிறப்பாக ஆடியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.
கம்பீர் 106 ரன்களுடனும், டிராவிட் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆட்டம் தொடர்ந்ததும் இருவரும் தொடர்ந்து நிலையாக ஆடி ரன்களைக் குவித்தனர்.
டிராவிட் 281 பந்துகளைச் சந்தித்து 109 ரன்களைக் குவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டிராவிட் போட்டுள்ள சதம் இது. இதன் மூலம் தனது பேட்டிங் குறித்த சர்ச்சைக்கும் டிராவிட் முற்றுப் புள்ளி வைத்தார்.
கம்பீர் தொடர்ந்து ரன்களைக் குவித்து 179 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சில பந்துகளில் நிமிடங்களிலேயே டிராவிடும் ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்தார். 136 ரன்களைக் குவித்தார் டிராவிட்.
பின்னர் சச்சின் டெண்டுல்கரும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்தனர். ஆனால் லட்சுமண் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். பிளின்டாப் இவரை வெளியேற்றினார்.
தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த டெண்டுல்கர் 11 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்வான் பந்தில் சச்சின் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததால் இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது.
கேப்டன் டோணியும், யுவராஜ் சிங்கும் இணைந்து ஆடினர். இருவரும் சேர்ந்து ரன்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவராஜ் சிங் 27 ரன்களிலும், டோணி 29 ரன்களிலும் வீழ்ந்தனர்.
பின்னர் வந்த ஹர்பஜன் சிங் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 24 ரன்களைக் குவித்தார்.
கடைசி வரிசை ஆட்டக்காரர்களில் அமீத் மிஸ்ரா சற்று சொல்லிக் கொள்ளும்படி ஆடி 31 பந்துகளில் 23 ரன்களைச் சேர்த்தார். ஜாகிர்கான் 7 ரன்களும், இஷாந்த் சர்மா அவுட் ஆகாமால் ஒரு ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், 158.2 ஓவர்களில் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்கை 453 ரன்களுக்கு இழந்தது இந்தியா.
வி.வி.எஸ்.லட்சுமண், சச்சின் டெண்டுல்கர், டோணி, யுவராஜ் சிங் இவர்களில் ஒருவர் சற்று சிறப்பாக ஆடியிருந்தால் இந்தியா இன்னும் அதிகமான ரன்களைக் குவித்திருக்க முடியும்.
இங்கிலாந்து தரப்பில் பிளின்டாப், ஸ்வான் தலா 3 விக்கெட்களையும், பனீசர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆன்டர்சன், பிராட் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
டிராவிட் சாதனை:
நேற்றைய ஆட்டத்தில் டிராவிட் புதிய சாதனையை நிகழ்த்தினார். 20 ரன்கள் எடுத்திருந்தபோது 3வது நிலை வீரராக 8000 ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.
இதுவரை 3வது நிலை வீரராக விளையாடி 19 சதம் உள்பட 8045 ரன்களைக் குவித்துள்ளார் டிராவிட்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவிலான செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்த வீரரும் டிராவிட்தான். நேற்று அவரும் கம்பீரும் இணைந்து 173 ரன்கள் சேர்த்தனர். இது டிராவிட் மூலம் கிடைத்த 73வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.