Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் போட்டிகள் ரத்து-பாதியில் நாடு திரும்பும் இங்கிலாந்து அணி

டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து தனது இந்தியா டூரை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது.

கட்டக்கில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நடந்த கூட்டத்தில் ஆட்டங்களைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் விளையாட மாட்டோம்-பாண்டிங்:

இதற்கிடையே மும்பையில் நடந்து கொண்டுள்ள தொடர் வன்முறையைத் தொடர்ந்து, 20 ஓவர் சான்பியன்ஸ் லீக் போட்டியை இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

'பாதுகாப்பான வேறு நாட்டுக்கு மாற்றினால் இந்தப் போட்டியில் விளையாடுவோம்' என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

வருகிற டிசம்பர் 3-ம் தேதி முதல் இந்திய பிரிமியர் லீக்கின் (ஐபிஎல்) 20 ஓவர் சாம்பியன் போட்டிகள் மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் நடக்கவிருந்தன. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் இந்தியா வருவதாக இருந்தன.

ஆனால் அதற்குள் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்துவிட்டதால், மும்பையில் நடப்பதாக இருந்த போட்டிகள் மட்டும் பெங்களூருக்கே மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணிகள் இதில் திருப்தியடையவில்லை. இந்தப் போட்டிகளை பாதுகாப்பான வேறு நாட்டுக்கு மாற்றினால் மட்டுமே தங்களால் பங்கேற்க முடியும் என அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங். அதுவரை விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட இந்தியா வருவதாக இருந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஷேன் வார்னும், இப்போது வர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையின் இன்றைய நிலையைப் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இப்போது தாக்குதல் நடந்துள்ள தாஜ் ஓட்டலில்தான் நாங்கள் வழக்கமாகத் தங்குவோம். இந்த முறையும் அங்குதான் தங்க இருந்தோம். நாங்கள் இருக்கும்போது இப்படி நடந்திருந்தால்... கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அடுத்த 12 மணி நேரம் குறித்துதான் எதையும் தெளிவாக எங்களால் சொல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

மறுபடியும் இந்தியா வெற்றி:

முன்னதாக கட்டாக்கில் நடந்த 5வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் 5வது போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது.

இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 271 ரன்களை எடுத்தது. கேப்டன் கெவின் பீட்டர்சன் அபார சதம் போட்டார்.

பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வீரேந்திர ஷேவாக்கும், சச்சின் டெண்டுல்கரும் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

சச்சின் டெண்டுல்கர் அரை சதம் போட்டார். சரியாக 50 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இது சச்சினுக்கு 90வது அரை சதமாகும். அவரும் ஷேவாக்கும் இணைந்து 136 ரன்களைக் குவித்தனர்.

ஷேவாக் மிகச் சிறப்பாக ஆடினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 73 பந்துகளில் 91 ரன்களைக் குவித்தார். இது இந்தத் தொடரில் அவர் போடும் 4வது அரை சதமாகும்.

முதல் நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் நேற்று 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஷேவாக்கும் வெளியேற இந்தியாவின் நிலை தடுமாற்றமானது.. இருப்பினும் கேப்டன் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர்.

சிறப்பாக ஆடிய டோணி 50 ரன்களை எடுத்தார். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 53 ரன்களைக் குவித்தார். இருவரும் இணைந்து 94 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இறுதியில் 43.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 273 ரன்களை எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+