ஆஸி. தொடர் ரத்தாகுமா? - இன்று பிசிசிஐ முக்கிய முடிவு

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் செய்த தவறுகளை விட மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது, ஹர்பஜன் சிங்கை தடை செய்த விவகாரம்.
இனவெறியைத் தூண்டும் வகையில் திட்டியதாக ஹர்பஜன் மீது குற்றம் சாட்டி, அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட ஐசிசி தடை விதித்துள்ளது.
இது நியாயமற்றது, ஏற்கவே முடியாது, உடனடியாக தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும், சர்ச்சைக்குரிய நடுவர்கள் ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
நடுவர்களை தடை செய்ய வேண்டும் என்றும் ஐசிசியில் இந்திய கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது. ஆனால் பக்னரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று ஐசிசி கூறியுள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நடுவரை நீக்க முடியாது என்று ஐசிசி கூறியுள்ளது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
சிட்னியிலேயே தொடர்ந்து தங்கியிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பக்னர் இருந்தால் அந்தப் போட்டியில் இந்தியா விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர், சரத் பவாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
எனவே பக்னர் நீக்கப்படாத பட்சத்தில், போட்டித் தொடரையே ரத்து செய்து விடலாம் என்ற முடிவுக்கு கிரிக்கெட் வாரியம் வரும் என்று தெரிகிறது.
ஒருவேளை இந்தியா, ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்ய முடிவெடுத்தால், அதற்கான அபராதமாக ரூ. 9 கோடி வரை ஐசிசிக்குத் தர வேண்டியிருக்கும். இதுதவிர வேறு சில பிரச்சினைகளும் வரக் கூடும் எனத் தெரிகிறது. எனவே தொடர் வாபஸ் என்ற முடிவை கடைசி கட்டமாக வைத்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், நாடு முழுவதும் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், உடனடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வர வேண்டும். தொடர்ந்து விளையாடக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால், வேறு வழியில்லாமல் தொடரை ரத்து செய்யும் முடிவுக்கு வாரியம் வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார், அடுத்த ஆண்டு ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என்பதும், 2011ல் தெற்காசியாவில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இத்தனையையும் மனதில் வைத்துக் கொண்டே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications