மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஃபியான் புயல் மும்பையில் பெரும் மழையைக் கொண்டு வந்துள்ளது. நேற்று முதல் அங்கு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த 7வது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மைதானத்தின் வெளிப்புறம் ஈரத்தில் ஊறிக் கிடக்கிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கணக்கில் வென்று விட்டது குறிப்பிடத்தக்கது. கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற இந்தியா ஆவலோடு இருந்தது. ஆனால் மழை வந்து அதை கெடுத்து விட்டது.
யூனிஸ் கானை நீக்க வேண்டும்...
இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் மீது முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பாய்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியை நாசமாக்கி விட்டார். கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க இதுவே சரியான தருணம். அவரை நீக்கி விட்டு அப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும். இதேபோல பயிற்சியாளர் இன்திகாப் ஆலமையும் நீக்க வேண்டும்.
சீனியர் வீரர்களான சோயிப்மாலிக், முகமதுயூசுப் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று புரியவில்லை. சீனியர் வீரர்களை அணி நிர்வாகம் நடத்தும் விதம் சரியில்லை. கேப்டன் யூனுஸ்கான் ரன் எடுக்க தடுமாறுகிறார். இதனால் அவரைத்தான் நீக்க வேண்டும் என்றார் இன்சமாம்.
அதேபோல, முன்னாள் பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸும் யூனிஸ்கான் கேப்டன் பதவியிலிருந்து விலகக் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேப்டன் பதவியை யூனுஸ்கான் தியாகம் செய்ய வேண்டும். அப்ரிடியை கேப்டனாக்க வேண்டும் என்றார்.
ஆனால் 2011ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை யூனிஸ்கான்தான் கேப்டன் என்று ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.