டெல்லி: ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட்டதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். அதேபோல ஹர்பஜன் சிங் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர் இன்று நீக்கப்பட்டார். இதை ஐசிசி தலைவர் மால்கம் ஸ்பீட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி கூறுகையில், இது அறிவுப்பூர்வமான முடிவு. ஐசிசி சரியான நடவடிக்ைகயை எடுத்துள்ளது. இது வரவேற்புக்குரியது. இந்திய - ஆஸ்திரரேலிய தொடர் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும். இந்த முடிவால் இரு நாட்டு ரசிகர்களும் நிச்சயம் மகிழ்வார்கள் என்றார்.
முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சித்து கூறுகையில், வேறு வழியில்லாமல் பக்னரை நீக்கியுள்ளனர். இது முன்பே நடந்திருக்க வேண்டும். பக்னர் அவராகவே விலகியிருக்க வேண்டும்.
இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ அல்லது இந்திய அணிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. மாறாக இந்திய மக்களுக்கு, இந்த நாட்டுக்குக் கிடைத்த வெற்றி. இதை வரவேற்கிறேன். அதேசமயம், ஹர்பஜன் சிங்குக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீதான இனவெறி கருத்துக்களும், தடையும் நீக்கப்பட வேண்டும். அதுதான் இந்தியாவுக்குக் கிடைக்கும் முழு வெற்றியாகும் என்றார்.
முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறுகையில், இது தானாக நடந்திருக்க வேண்டும். ஆனால் பெரும் நெருக்கடி கொடுத்த பிறகுதான் பக்னர் நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த முடிவு வரவேற்புக்குரியது.
பக்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். சொந்த நாடான ஜமைக்காவில் அவர் தனது காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்றார் ஜடேஜா.