செயின்ட் லூசியா: மழை வந்து 4வது போட்டியை குலைத்து விட்டதால் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ரத்தாகி விட்டது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா.
டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரை சவாலுடன் தொடங்கியது.
முதல் போட்டியில் பெரிய ஸ்கோரை எட்டியும் கூட இறுதியில் போராடியே வென்றது. 2வது போட்டியில் பரிதாபமாக தோற்றது. இருப்பினும் 3வது போட்டியில் டக்வொர்த் லூயிஸ் கை கொடு்க வென்று 2-1 என்ற முன்னிலையைப் பெற்றது.
இந்த நிலையில் செயின்ட் லூசியாவில் நேற்று 4வது மற்றும் இறுதிப் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக, தலா 49 ஓவர்கள் என்ற கணக்கில் தொடங்கியது.
டோணி டாஸ் வென்று மேற்கு இந்தியத் தீவுகளை பேட் செய்யப் பணித்தார். அந்த அணியும் பேட்டிங்கைத் தொடங்கி 8வது ஓவர் நடந்து கொண்டிருந்தபோது மழை வந்து ஆட்டத்தை சீர்குலைத்து விட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்ற ஸ்கோருடன் இருந்தது. கெயில் டக் அவுட் ஆகியிருந்தார். சர்வான் 12, மோர்ட்டான் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து 2-1 என்ற முன்னிலையில் இருந்த இந்தியா தொடரை வென்றது.
கடந்த 2002ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி இங்கு ஒரு நாள் தொடரை வென்றிருந்தது. அதற்கு முன்பும், அதன் பின்னரும் இந்தியா எந்தத் தொடரையும் இங்கு வென்றதில்லை. இதை மாற்றி நேற்று டோணி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைத்தது.