மோதல்: கம்பீர்-வாட்சனுக்கு ஐசிசி தண்டனை?
டெல்லி: டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது ஆடுகளத்தில் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் மற்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஷான் வாட்சன் ஆகியோருக்கு ஐசிசி தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
இரு வீரர்களும் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கம்பீர் மீது ஐசிசி நடத்தை விதி சி1, லெவல் 2 குற்றச்சாட்டும், வாட்சன் மீது ஐசிசி சி1, லெவல் 1 குற்றச்சாட்டும் சாட்டப்பட்டு்ள்ளது.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் 51வது ஓவரின்போது ரன் எடுக்க ஓடிய கம்பீருக்கும்,வாட்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் பில்லி பெளடன் வந்து இருவரையும் விலக்கி விட்டார். இல்லாவிட்டால் இந்த மோதல் கைகலப்பில் முடியும் அபாயம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து பில்லி பெளடன் மற்றும் இன்னொரு நடுவர் அலிம் தர், 3வது நடுவர் சுரேஷ் சாஸ்திரி ஆகியோர் புகார் கொடுத்தனர்.
இன்று மாலை இரு வீரர்கள் மீதான புகார் குறித்து போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விசாரிக்கவுள்ளார். அதன் பின்னர் தண்டனை குறித்து அறிவிக்கப்படும்.
லெவல் 2 குற்றச்சாட்டுக்கான தண்டனையாக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீத அபராதம் அல்லது 100 சதவீத அபராதம் அல்லது ஒரு டெஸ்ட் அல்லது 2 டெஸ்ட் தடை ஆகியவை
அடங்கும்.
லெவல் 1க்கான தண்டனை, கண்டனம் அல்லது 50 சதவீத போட்டி கட்டண அபராதம் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications