டெல்லி: காயம் முழுமையாக குணமடைந்த நிலையில் வரும் 22ம் தேதி தென் ஆப்ரிக்காவில் துவங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர் கம்பீருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் பயிற்சி பெற்று வந்தார். தற்போது அவரது காயம் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க நாளை கிளம்பும் இந்திய அணியுடன் தென் ஆப்ரிக்க பறக்க கம்பீரும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் நன்றாக தேறிவிட்டேன். போட்டிகளில் பங்கேற்கும் உடல் தகுதி பெற்றுவிட்டேன். இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டி 26ம் தேதி தான் துவங்குகிறது.
இதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் கால அவகாசம் இருப்பதால் இத்தொடரில் நிச்சயம் விளையாட முடியும் என நம்புகிறேன் என்றார்.
கம்பீரின் வருகை குறித்து கேப்டன் டோணி கூறுகையில்,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. சச்சின், ஷேவாக், கம்பீர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது சச்சின் சூப்பர் பார்மில் இருக்கும் சமயத்தில் கம்பீர் உடல் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. ஆனால், சில சமயங்களில் தவறு நடந்துவிடுகிறது. இதை தடுக்க முயற்சிப்போம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்து விளையாடுவோம். அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி ஆஸ்திரேலியவாக இருந்தாலும் சரி.
தென் ஆப்ரிக்க மைதானங்களில் பந்து எகிறும் என்பது உண்மை தான். அதனால் நமது பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல மற்ற அணி பேட்ஸ்மேன்களுக்கும் நெருக்கடி தான் என்றார்.