சென்னை டெஸ்ட்-6 வி. வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும்.
வெற்றிக்கு 387 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று ஆடத் தொடங்கிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர இறுதியில், 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் சிறப்பாக ஆடி 83 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடியைக் குறைத்தார்.
இதையடுத்து இன்று காலை இந்தியா தனது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தது. கம்பீர் சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். 66 ரன்களைச் சேர்த்த கம்பீர் ஆன்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மீண்டும் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் சற்று நிதானித்து ஆடி விக்கெட் வீழ்ச்சியை சற்று தள்ளிப் போட்டார்.
மகா பொறுமையுடன் ஆடிய அவர் அரை சதம் அடித்தார். 51 ரன்களுடன் சச்சின் விளையாடினார்.
மறு முனையில் வி.வி.எஸ்.லட்சுமண் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் சச்சினும், யுவராஜும் இணைந்து அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
சச்சின் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அருமையான சதத்தைப் போட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
186 பந்துகளைச் சந்தித்த சச்சின் 103 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் மட்டுமே. மற்றவை சிங்கிள் ரன், இரண்டு ரன்கள் என ஓடி ஓடி சேகரித்தவை.
மறு முனையி்ல் யுவராஜ் சிங் 85 ரன்களைக் குவித்து டெஸ்ட் போட்டியிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்ததோடு, இந்தியாவுக்கு வெற்றி வாகை சூடவும் காரணமாக அமமைந்தார்.
98.3 ஓவவர்களில் நான்கு விக்கெட்களை மட்டும் இழந்து 387 ரன்களை எடுத்து இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வென்றது.
இந்தியாவின் வெற்றிக்கு சச்சின் உறுதுணையாக இருந்தாலும், 2வது இன்னிங்ஸில் மடமடவென பட்டாசாகப் பொறிந்து, 68 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் குறைத்தவரான வீரேந்திர ஷேவாக்குக்கு ஆட்ட நாயகன் பரிசு கொடுக்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே நான்காவது மிகப் பெரிய ரன் சேஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications