டெல்லி: பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இருந்து துவக்க வீரர் கௌதம் கம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடக்கிறது.
இத்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று ஒரு நாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந் நிலையில அவர்களுக்கு சோகமான செய்தி.
துவக்க வீரர் கம்பீர் காயம் காரணமாக நாடு திரும்புகிறார் என்பதே அது.
ஏற்கனவே அதிரடி துவக்க வீரர் ஷேவாக், புயல்வேக பவுலர் ஜாகிர் கான் ஆகியோர் இல்லாமல் இலங்கை சென்றுள்ள இந்திய அணி்க்கு கம்பீரின் நீக்கம் பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
கம்பீருக்கு கால் தசையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியுள்ளனர். இதையடுத்து அவர் இந்தியா திரும்புகிறார் என்றார்.
இந்நிலையில் கம்பீருக்கு பதிலாக துவக்க வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது. முரளி விஜய் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு துவக்க வீரராக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்றாலும் ஒரு நாள் போட்டியில் அவர் களமிறங்க போவது இதுவே முதல் முறை.
நாளை இந்தியா, நியூசி. மோதல்...
இந்நிலையில் நாளை இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் அவர், சச்சினுடன் ஆட்டத்தை துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.