முத்தரப்பு தொடர்: கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமன் நீக்கம்

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி அடிலைடில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், வரும் பிப்ரவரி 3ம் தேதி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணியின் தேர்வாளர் திலீப் வெங்சர்க்கார் முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவித்தார்.
இந்த அணியில் முன்னணி வீரர்களான சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் பாரபட்சமான முறையில் தேர்வை நடத்தியுள்ளதாக ரசிகர்களிடையே கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்:
மகேந்திர சிங் டோனி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பிர், வீரேந்தர் சேவக், திணேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, பிரவின்குமார், ஹார்பஜன் சிங், ரோஹித்சர்மா, இஷாந்த் சர்மா, ராபின் உத்தப்பா, இர்பான் பதான், பியூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங் மற்றும் ஸ்ரீசாந்த்.
இவர்களில் ஸ்ரீசாந்த் இன்னும் உடல் தகுதித் தேர்வில் கூட கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது பெயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல தமிழக வீரர் பத்ரிநாத் பெயர் அணியில் இடம் பெறவில்லை. மேலும் முரளி கார்த்திக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications