
ஹைதராபாத் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற புதிய சாதனையை டோணி படைத்தார்.
இதுவரை கங்குலிதான் அந்த சாதனைக்குரிய கேப்டனாக இருந்து வந்தார். தற்போது கங்குலியைத் தாண்டியுள்ளார் டோணி. இதையடுத்து டோணிக்கு கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டோணியின் தலைமையால், இந்திய கிரிக்கெட் அணி வளர்ச்சிப் பாதையை நோக்கி, மேலும் பயணிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், இதுவரை 45 போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்தி உள்ள டோணி, 22 வெற்றிகள், 12 தோல்விகள் மற்றும் 11 போட்டிகளை டிரா செய்துள்ளார்.
சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி, 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளையும், 13 தோல்விகளையும், பெற்றுள்ளது. 15 போட்டிகள் டிரா ஆனது.