பெங்களூர்: ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக முன்னாள் கேப்டன் கங்குலி அறிவித்துள்ளார். இதனால் கங்குலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் கங்குலி. இந்திய அணியில் இளம் ரத்தம் பாய முக்கிய காரணமாக இருந்தவர்.
36 வயதாகும் கங்குலி கடந்த சில வருடங்களாக அணியில் தொடர்ந்து இடம் பெறாமல், புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம் பெற மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் கங்குலி.
ஆனால் இந்தத் தொடருடன் கெளரவமாக ஓய்வு பெற்று விட வேண்டும் என்ற ரகசிய நிபந்தனையுடன்தான் கங்குலியை அணியில் சேர்த்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
இது உண்மைதானோ என்பதை நிரூபிக்கும் வகையில், நேற்று தனது ஓய்வு குறித்து அறிவித்தார் கங்குலி.
நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக பெங்களூர் வந்துள்ளார் கங்குலி. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணியில் நிறைய மூத்த வீரர்கள் உள்ளனர். ஆனால் என் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆனாலும் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கேற்ப வாழ பழகிக் கொண்டு விட்டேன்.
எனக்கு எப்போது ஓய்வு தேவை என்றுதோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெற்று விடுவேன். ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ஓய்வு பெறப் போகிறேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள்தான் எனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையின் கடைசித் தொடராகும். அதன் பிறகு ஓய்வு பெறுகிறேன். எனது முடிவை அணி வீரர்களிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் இப்போது நன்றி கூறிக் கொள்கிறேன். வெற்றி முகத்துடன் அணியை விட்டு விலகுவேன் என நம்புகிறேன்.
இராணிக் கோப்பைப் போட்டியில் நான் விலக்கப்படுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதிக எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆஸ்திரேலிய தொடருக்குக் கூட என்னை எடுப்பார்கள் என நினைக்கவில்லை. இந்த தொடருக்குப் பின்னரும் கூட என்னை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
வீரர்கள் யாருக்கும் கட்டாய ஓய்வு அளிக்க முடியாது. நான், சச்சின், கும்ப்ளே, டிராவிட், லட்சுமண் என யாருக்கும் வேறு யாரும் அப்படி அளிக்க முடியாது. இருந்தாலும் கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.
ஓய்வு முடிவு கஷ்டமானதுதான். ஆனால் இது திடீர் முடிவு அல்ல என்றார் கங்குலி.
அஸாருதீனுக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றியவர் கங்குலி. அவரது தலைமையில் இந்தியா பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 49 டெஸ்ட் போட்டிகளில் கங்குலி தலைமையில் ஆடி 21 வெற்றிகளை இந்தியா பெற்றது. 13 தோல்வியும், 15 டிராவும் இந்தக் கணக்கில் உள்ளது.
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தது கங்குலி அணி. ஆனால் அப்போது சில வீரர்களிடம் நிலவிய கெளரவ மனப்பான்மையால் இந்தியா தேவையில்லாமல் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
1996ம் ஆண்டு கங்குலி தனது டெஸ்ட் வாழ்க்கையை லார்ஸ்ட் மைதானத்தில் தொடங்கினார். அப்போது அவருடன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் ராகுல் டிராவிட். இருவரும் ஒரே செட்.
2000மாவது ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2005ம் ஆண்டு வரை இதில் நீடித்தார். அப்போது பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையே மோதல் மூண்டது. இதைத் தொடர்ந்து கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. டிராவிட் கேப்டனாக்கப்பட்டார்.
1972ம் ஆண்டு பிறந்த கங்குலி, இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6888 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் சராசரி 41.74. 15 செஞ்சுரிகளையும், 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் - 239.
311 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி, 11 ஆயிரத்து 363 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 41.02 ஆகும். 22 சதங்களைப் போட்டுள்ளார். 100 விக்கெட்களையும் வீழ்த்தி தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ஆகும்.