இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்?

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல், உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் ராஜினாமா செய்து விட்டு ஆஸ்திரேலியாவுக்குப் போய் விட்டார்.
அதன் பின்னர் நிரந்தரப் பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்திய அணியின் வெளிநாட்டு டூர்களுக்கு தற்காலிகமாக மேனேஜர்கள்தான் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் முடுக்கி விட்டது. தற்போது தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கிர்ஸ்டன். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அவரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளர் தேர்வுக் குழுவினர் டெல்லியில் திங்கள்கிழை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, டெஸ்ட் கேப்டன் அனில் கும்ப்ளே, நிரஞ்சன் ஷா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பயிற்சியாளராக நியமிக்கப்படுவது குறித்து கிர்ஸ்டனுடன், கிரிக்கெட் வாரியக் குழு விரிவாக விவாதித்தது.
இந்த சந்திப்பு குறித்து கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், கிர்ஸ்டனுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. அவர் ஒரு வாரத்தில் பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்லும்போது புதிய பயிற்சியாளருடன்தான் செல்லும் என்றார்.
முன்னதாக, முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கெப்ளர் வெஸ்ஸல்ஸின் பெயரையும் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு பரிசீலித்தது. இருப்பினும் பின்னர் கிர்ஸ்டனை பயிற்சியாளராக்கும் முடிவுக்கு தேர்வுக்குழு வந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications