கவாஸ்கர் கட்டுரை- ஐசிசி டென்ஷன்: பதவியைப் பறிக்க முடிவு!

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும, கிரிக்கெட்டின் டைனோசர்கள். கண்ணை மூடிக் கொண்டு இரு நாட்டு அணிகளும் செயல்படுகின்றன. உண்மை நிலவரம் என்ன என்பது அவர்களுக்குப் புரிவதே இல்லை, புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை என்று கடுமையாக கூறியிருந்தார் கவாஸ்கர்.
மேலும், சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ஹர்பஜன் சிங் மீதான இனவெறி சர்ச்சையில் தீர்ப்பளித்த போட்டி நடுவர் மைக் புராக்டரையும் கடுமையாக சாடியிருந்தார் கவாஸ்கர்.
புராக்டர் நிற பேதம் பார்க்கிறார். ஆஸ்திேரலியர்களுக்கு சாதகமாகவும், இந்தியர்களுக்கு எதிராகவும் நடந்து கொள்கிறார் என்று கூறியிருந்தார் கவாஸ்கர்.
இந்த நிலையில் கடந்த வாரம் துபாயில் நடந்த ஐசிசி செயற்குழுக் கூட்டத்தில் கவாஸ்கர் கட்டுரை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கவாஸ்கரை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. ஐசிசியின் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.
இருப்பினும், கவாஸ்கர் விவகாரம் குறித்து ஐசிசி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கிரிக்கெட்டை விரும்பாத டோணி
இதற்கிடையே, இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் டோணி, கிரிக்கெட் போட்டிகளை அதிகம் பார்க்க மாட்டாராம். சச்சின் டெண்டுல்கர் விளையாடினால் மட்டும்தான் அந்தப் போட்டியைப் பார்ப்பாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சீரியஸாக கிரிக்கெட் பார்க்கும் ஆள் அல்ல. கடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது கூட சச்சின் பேட் செய்ததை மட்டுமே பார்த்தேன். கடைசிப் போட்டியில், நாம் ஆஸ்திரேலியாவுடன் ஆடி தோற்றபோது, சச்சின் பேட் செய்தபோது மட்டுமே பார்த்தேன். உட்கார்ந்து, கிரிக்கெட் பார்ப்பது எல்லாம் நமக்கு ஒத்துவராது.
கிரிக்கெட் ஆட வருவதற்கு முன்பே எனக்கு கிரிக்கெட்டில் எல்லாமும் தெரியாது. ஆட வந்த பிறகுதான் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன்.
விளையாடியபோது கற்றுக் கொண்டதை வைத்துத்தான் விளையாடி வருகிறேன். அனுபவம்தான் எனக்குப் பாடம். புள்ளி விவரம் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. யார் முதன் முதலில் இதைச் செய்தது, அதைச் செய்தது என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக உங்களுக்கு சரியான பதில் கிடைக்காது.
என்னை விட அனில் கும்ப்ளேவுக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை உள்ளது. அவரிடமிருந்து நான் சிலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் மிகப் பெரிய மனிதர். தலைமைப் பொறுப்புக்கேற்ற சிறந்த வீரர். அவர் களத்தில் இருந்தால் வெற்றியை மட்டுமே மனதில் வைத்திருப்பார்.
எதிரணியினருக்கு கையில் 50 பந்துகள் இருந்து ஒரு ரன் மட்டுமே தேவை என்றாலும் கூட பந்து வீச்சில் சீரியஸாக இருப்பவர் கும்ப்ளே. அந்த பேட்மேனை எப்படி அவுட் ஆக்குவது என்பதில்தான் கவனமாக இருப்பார்.
அவர்கள் ஜெயிக்கும் வரை நான் தோற்க மாட்டேன் என்ற வைராக்கியம் கொண்டவர் கும்ப்ளே என்றார் டோணி.
சச்சின் ஆடுவதை மட்டுமே பார்ப்பேன். மற்ற வீரர்கள் ஆடுவதைப் பார்க்க மாட்டேன் என்று டோணி கூறினால் பிறகு எப்படி அவருக்கும், மற்ற வீரர்களுக்கும் இடையே கம்யூனிகேஷன் நன்றாக இருக்கும்??
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications