For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் மீதான அப்பீல் மனு: நாளை விசாரணை

By Staff
Harbhajan Singh


அடிலைட்: இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி சர்ச்சை தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மேல் முறையீட்டு ஆணையர் ஜான் ஹன்சன் அறிவித்துள்ளார்.

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது நடுவர்கள் செய்த பெரும் குழப்பத்தால், தவறான தீர்ப்புகளால் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த வெற்றி கை நழுவிப் போனது.

அத்தோடு நில்லாமல் ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக ஆஸ்திரேலியா புகார் கூறியது. இந்தப் புகாரை விசாரித்த ஐசிசி போட்டி நடுவர் மைக் புராக்டர், ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட தடை விதித்தார்.

இந்த தீர்ப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தது. ஹர்பஜன் சிங் மீதான தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும் ஹர்பஜன் சிங் தொடர்ந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.

இதையடுத்து ஐசிசி பணிந்தது. ஹர்பஜன் சிங் மீதான அப்பீல் மனுவை விசாரிக்க நியூசிலாந்தைச் ேசர்ந்த ஜான் ஹன்சன் நியமிக்கப்பட்டார். அவரது விசாரணை முடிவடையும் வரை ஹர்பஜன் சிங் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.

இதையடுத்து பெர்த் மற்றும் அடிலைட் டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடினார்.

இந்த நிலையில் ஹன்சன் தனது விசாரணையை நாளை மேற்கொள்ளவுள்ளார். அடிலைட் பெடரல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். இது ரகசிய விசாரணையாக இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான விளையாட்டு விதிமுறைகளின் கீழ் இந்த விசாரணை நடைபெறும்.

வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஐசிசி போட்டி நடுவர் மைக் புராக்டரிடம் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் இந்த மறு விசாரணையின்போது பரிசீலிக்கப்படும்.

இதுதவிர ஸ்டம்புகளில் வைக்கப்பட்டிருக்கும் மைக்ரோபோனும் ஆதாரமாக இடம் பெறும். வேறு ஆதாரங்கள் இருந்தால் அவையும் பரிசீலிக்கப்படும்.

முதலில் குற்றம் சாட்டியவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் தங்களது வாதங்களை எடுத்து வைக்க வாய்ப்பு தரப்படும். அதன் பின்னர் இரு தரப்பு வக்கீல்களும் தேவைப்பட்டால் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

விசாரணை முடிந்ததும் தனது தீர்ப்பை ஹன்சன் எழுத்துப்பூர்வமாக ஐசிசியிடம் அளிப்பார்.

இந்த விசாரணையில் ஹர்பஜன் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து விலகும் முடிவில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நாளைய விசாரணை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டம்ப் ஆதாரத்திற்கு வாரியம் எதிர்ப்பு:

இதற்கிடையே போட்டி நடந்தபோது ஸ்டம்புகளில் வைக்கப்பட்டிருந்த ஆடியோ ஆதாரத்தை விசாரணையின்போது சேர்க்க ஐசிசி மேல் முறையீட்டு ஆணையர் முடிவு செய்துள்ளதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அதை ஏற்க முடியாது என அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த மைக்ரோபோன் ஆடியோ ஆதாரம் திருத்தப்பட்டிருக்கலாம், முறைகேடாக மாற்றப்பட்டிருக்கலாம். எனவே அதை நாங்கள் புதிய ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்.

இதற்கிடையே, இந்த விவாகரத்தை கிரிக்கெட் வாரிய அளவில் தீர்த்துக் கொள்ளும் முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் கிரேக் ஓ கானருடன் அவர் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். மேல் முறையீட்டு ஆணையர், ஹர்பஜன் சிங் மீதான புகாரை ஏற்று, தண்டனையை உறுதி செய்தால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து விலக இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக கானரிடம் பிந்த்ரா தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அப்படி நடந்தால் அது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் என்றும், எனவே தனது புகாரை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் திரும்பப் பெற முயற்சிக்க வேண்டும் எனவும் கானரை, பிந்த்ரா கேட்டுக் கொண்டுள்ளதாக ெதரிகிறது.

இருப்பினும் பான்டிங் அப்படி செய்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+