இனவெறி சர்ச்சை: ஹர்பஜனுக்கு 3 டெஸ்டுகளில் ஆட தடை

சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் பாரபட்ச முடிவுகளால் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அபாரமாக ஆடினார். சிறப்பாக ஆடி அரை சதம் போட்ட அவருக்கும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹர்பஜன் சிங்கை சைமண்ட்ஸ் திட்ட, பதிலுக்கு ஹர்பஜனும் திட்டினார். அப்போது தன்னை இனவெறி வார்த்தைகளால் ஹர்பஜன் திட்டியதாக ஐசிசி போட்டி நடுவர் மைக் புராக்டரிடம் புகார் செய்தார் சைமண்ட்ஸ்.
ஆனால் இனவெறி வார்த்தைகளால் ஹர்பஜன் திட்டவில்லை, அது சாதாரணமாக நடக்கும் சண்டைதான் என நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெளிவாக கூறினார். ஹர்பஜனுக்கு இந்திய அணி நிர்வாகம் முழு ஆதரவு தெரிவித்தது.
இருப்பினும் ஆஸ்திரேலிய தரப்பு தங்களது வாதத்தில் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து நேற்று ஹர்பஜன் சிங்கிடம் விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
விசாரணையின்போது ஹர்பஜனுடன் கேப்டன் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், மேலாளர் சேத்தன் செளகான், மீடியா மேனேஜர் எம்.வி.ஸ்ரீதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சைமண்ட்ஸுக்கு ஆதரவாக கேப்டன் பான்டிங், ஆடம் கில்கிறைஸ்ட், மாத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், டீம் மேனேஜர் ஸ்டீவ் பெர்னார்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.
விசாரணையின் இறுதியில், ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை சேத்தன் செளகான் உறுதி செய்தார். விசாரணைக்குப் பின்னர் செளகான் கூறுகையில், எங்களது கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் ஏற்கப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டன. ஹர்பஜன் மீது எந்தத் தவறும் இல்லை. இந்த தீர்ப்பு நியாயமற்றது, அநியாயமானது என்றார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஹர்பஜன் மீதான தடை உத்தரவு அமலுக்கு வராது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications